கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநாட்டுப் பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை வழங்கவுள்ளார். இந்தச் சூழலில், விபத்தில் பலியான 9 வயது சிறுவன் பிரதிக்கின் (Prathik) தாய் ப. சர்மிளா வெளியிட்டுள்ள கண்ணீர் கலந்த பரபரப்பு வீடியோ ஒன்று, தவெக அரசுக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் புதிய நிர்வாகச் சிக்கலையும், அரசியல் தலைவலியையும் ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட தாய் சர்மிளா வெளியிட்டுள்ள வீடியோ வாக்குமூலத்தில், “எனது மகன் பிரதிக்குக்கு 6 மாதக் குழந்தையாக இருந்தபோதே, எனது கணவர் பன்னீர்செல்வம் எங்களைக் கைவிட்டுவிட்டு ஓடிவிட்டார். கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுடன் அவர் எவ்விதத் தொடர்பிலும் இல்லை; எனது தம்பிகள் மற்றும் தாயாரின் ஆதரவோடுதான் நானும் எனது மகனும் வாழ்ந்து வந்தோம். எனது மகனின் இறுதிச் சடங்கிற்குக்கூட வராத எனது கணவர் பன்னீர்செல்வத்தின் பெயரைப் பயனாளிகள் பட்டியலில் சேர்த்து, அவருக்கு அரசு வேலை வழங்க தவெக அரசு முடிவு செய்திருப்பது அப்பட்டமான அநீதி” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தனது கணவர் பன்னீர்செல்வத்தை முன்னிறுத்திச் சில எதிர்க்கட்சி நிர்வாகிகள், உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரி மனுத் தாக்கல் செய்ய வைத்துள்ளதாகவும், தனக்கோ அல்லது தனது குடும்பத்தினருக்கோ இந்த சட்டப் போராட்டங்கள் குறித்து எதுவும் தெரியாது என்றும் சர்மிளா உடைந்து போய்ப் பேசியுள்ளார். உண்மையாகப் பாதிக்கப்பட்டு, குழந்தையை இழந்து நடுத்தெருவில் நிற்கும் தனக்கு வழங்கப்பட வேண்டிய அரசு வேலையை, தங்களைக் கைவிட்ட கணவனுக்கு வழங்கக் கூடாது என்றும், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் உடனடியாகத் தலையிட்டுத் தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் இன்று கரூரில் 32 பேருக்குக் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கவுள்ள நிலையில், இந்தத் ‘தாய் VS தந்தை’ வேலைவாய்ப்புச் சர்ச்சை பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, “இன்று வழங்கப்படும் இந்த அரசுப் பணி நியமன ஆணைகள் அனைத்தும் தற்காலிகமானவை (Temporary) மட்டுமே” என்று அதிரடி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளதால், கரூரில் தவெக அரசுக்கு அடுத்தடுத்து சட்ட ரீதியான நெருக்கடிகள் முற்றியுள்ளன.