கிழக்கு சீனாவின் புஜியான் (Fujian) மாகாணத்தில் உள்ள ஜின்ஜியாங் (Jinjiang) மாநகரத்தின் முக்கிய உற்பத்தி மையமான ‘ஹுய்தெங்’ (Huiteng Shoes) காலணி தொழிற்சாலையில் நேற்று (ஜூலை 9, 2026) மதியம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 28 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சீனாவில் விளையாட்டுப் காலணிகளின் தலைநகரம் என்று அழைக்கப்படும் இப்பகுதியில் அமைந்துள்ள ஐந்து அடுக்கு மாடிக் கட்டிடத்தில் மதிய உணவு நேரத்தில் திடீரென இந்த விபத்து நேரிட்டுள்ளது. தொழிற்சாலையின் அடித்தளத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரப்பர், பசை உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய இரசாயனப் பொருட்கள் காரணமாகத் தீ கண் இமைக்கும் நேரத்தில் ஒட்டுமொத்த கட்டிடத்திற்கும் பரவி நரகமாக மாறியது.
விபத்து நேரிட்ட சமயத்தில் அந்த தொழிற்சாலையினுள் 237 தொழிலாளர்களும், இரண்டு வெளிப்பக்க விநியோகஸ்தர்களும் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கட்டிடத்தின் கீழ் தளங்கள் முழுவதும் கரும்புகை மற்றும் தீப்பிழம்புகள் சூழ்ந்ததால், வெளியேற வழியின்றி நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மாடிகளுக்குள் சிக்கிக் கொண்டனர். சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நெஞ்சை உலுக்கும் வீடியோக்களில், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தொழிலாளர்கள் சிலர் ஜன்னல்கள் மற்றும் மேல் கூரைகளில் (Rooftop) இருந்து குதிப்பதும், அடர்ந்த நச்சுப் புகைக்கு நடுவே சிக்கி உதவிக்காகக் கைகளை அசைத்துக் கதறுவதும் பதிவாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த 500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் 35-க்கும் மேற்பட்ட அவசரக்கால மீட்பு வாகனங்கள் பல மணி நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தன. தீயணைப்புத் துறையினரால் கட்டிடத்திலிருந்து 213 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட போதிலும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இருவர் உயிரிழந்தனர். மேலும், மாயமானதாகத் தேடப்பட்டு வந்த 26 தொழிலாளர்களும் கட்டிடத்திற்குள்ளேயே உடல் கருகிப் பலியானதைச் சீன அரசு ஊடகமான சிசிடிவி (CCTV) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தக் கோர விபத்து குறித்து அதிர்ச்சி வெளியிட்டுள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங் (Xi Jinping), விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய உடனடி உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், “தொழிலாளர்களின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஹுய்தெங் காலணி நிறுவனத்தின் கணக்குகளை முடக்கியுள்ள சீனப் பாதுகாப்புப் பிரிவு போலீஸார், தொழிற்சாலையின் உரிமையாளர் மற்றும் முக்கிய மேலாளர்களைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.