சென்னையில் மக்களவைத் தேர்தல் அலுவலகம் அமைப்பதற்காகக் குத்தகைக்குப் பெறப்பட்ட வணிக ரீதியிலான நிலத்தை, குத்தகை காலம் முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளதாகத் திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது முதலமைச்சரின் முகவரித் துறையில் (CM Cell) அதிரடியாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பி.சி.எம். சன்ஸ் (PCM Sons) நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள இந்தச் பரபரப்புப் புகார் மனு, தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட அந்தச் சொத்து வி. உலகநாதன் என்பவரின் பெயரில் 6 மாத காலத்திற்கு மட்டுமே குத்தகைக்கு விடப்பட்டிருந்ததாகப் புகார் தாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குத்தகை காலம் முடிவடைந்த பின்னரும் அந்த நிலத்தின் உரிமையாளரிடம் சொத்து மீண்டும் ஒப்படைக்கப்படவில்லை. மேலும், குத்தகை தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை எவ்வித வாடகைத் தொகையும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும், இதன் காரணமாகத் தங்களுக்குப் பெருமளவில் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நிலத்தின் உரிமையாளர் தனது புகார் மனுவில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலப் பிரச்சனை தொடர்பாகத் திருப்போரூர் வட்டாட்சியர் ஆறுமுகம் முன்னிலையில் ஏற்கனவே பலமுறை பேச்சுவார்த்தைகள் மற்றும் சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாகக் கடந்த ஜூன் 19 அன்று முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசனை நேரில் சந்தித்துப் பேசியபோது, அந்தச் சொத்தை அவரே நிரந்தரமாக வைத்துக் கொள்ள விரும்புவதாகவும், அதற்குரிய தொகையைத் தந்துவிடுவதாகவும் கூறியுள்ளார். எனினும், தங்களுக்கு அந்த இடத்தை விற்க விருப்பமில்லை என்பதால், ஆக்கிரமிப்பை அகற்றி உடனடியாக நிலத்தை மீட்டுத் தர வேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்கள் முதல்வரின் தனிப்பிரிவை நாடியுள்ளனர்.
ஏற்கனவே திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் சிலர் பல்வேறு மோசடி மற்றும் ஊழல் வழக்குகளின் காரணமாகப் புலனாய்வு அமைப்புகளின் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ள நிலையில், தற்பொழுது தா.மோ. அன்பரசன் மீதும் நில அபகரிப்பு மற்றும் போலி முகவரி கொடுத்து குத்தகை ஒப்பந்தம் செய்ததாகப் புகார் எழுந்துள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகத் தற்பொழுது முதல்வரின் முகவரித் துறை அதிகாரிகள் தீவிரப் பூர்வாங்க விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.