Posted in

புது ஸ்டைலில் குதிரை பேரம்! தவெக அரசு மீது ஆளுநரிடம் அடுத்தடுத்து பாயும் புகார்கள்; தமிழ்நாட்டில் வெடித்த புதிய அரசியல் போர்!

தமிழகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களை வளைப்பதற்காக “புது ஸ்டைலில் குதிரை பேரம்” (Horse Trading) நடத்தி வருவதாகக் கூறி ஆளுநர் ராஜேந்திர அர்லேகரிடம் அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வருவது மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் நகர்வுகளில், தூய சக்தி என்று தங்களைச் சுயதம்பட்டம் அடித்துக் கொண்டவர்கள், தற்போது துயரசக்தியாக மாறி ஜனநாயக மாண்புகளைக் குலைத்து வருவதாக எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கத் தொடங்கியுள்ளன.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில், அக்கட்சியின் கொறடா அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் ஆளுநரை நேரில் சந்தித்துப் புகார் மனு அளித்துள்ளனர். தவெக அரசு தங்களது அதிகார பலம் மற்றும் பல கோடி ரூபாய் பண பலத்தைப் பயன்படுத்தி, அதிமுகவின் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், மரகதம் குமரவேல், சத்யபாமா உள்ளிட்ட 6 சட்டமன்ற உறுப்பினர்களைக் குதிரை வேகத்தில் இழுத்து, தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வைத்துள்ளதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தலைமைச் செயலகத்தையே தவெக தங்களது கட்சி அலுவலகம் போல மாற்றி, இந்த ஜனநாயக விரோதச் செயல்களை அரங்கேற்றி வருவதாகவும், இதுகுறித்து சிபிஐ (CBI) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதிமுகவைத் தொடர்ந்து தற்போது பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் தவெக அரசுக்கு எதிராக ஆளுநரை நாட முடிவு செய்துள்ளது இந்த விவகாரத்தை மேலும் சூடாக்கியுள்ளது. தவெகவில் அண்மையில் இணைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், தவெகவினர் தன்னிடம் கட்சி மாறும்படி அணுகியதாகப் பேசியதைச் சுட்டிக்காட்டியுள்ள திமுக முதன்மைச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, ஆளுநரிடம் தவெகவின் குதிரை பேரத்திற்கு எதிராகத் தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். வேப்பனஹள்ளி திமுக எம்.எல்.ஏ சீனிவாசனிடமும் ரூ. 50 கோடி வரை பேசி தவெக குதிரை பேரத்தில் ஈடுபட முயன்றதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல் வட்டாரத்தை அதிர வைத்துள்ளன.

எதிர்க்கட்சிகளின் இந்தத் தொடர் புகார்களைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகை இந்த விவகாரத்தில் தீவிரமான சட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகத் டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முறைகேடான கட்சித் தாவல்கள் மற்றும் ராஜினாமக்களுக்குப் பின்னால் ஏதேனும் அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளதா? என்று சரமாரியான கேள்விகளுடன் முதலமைச்சர் விஜய்க்கு ஆளுநர் அதிகாரப்பூர்வமாக விளக்கக் கடிதம் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, குதிரை பேரம் என்ற குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ள முதலமைச்சர் விஜய், மாற்றுக்கட்சியினர் தங்களது சுய விருப்பத்தின் பேரிலேயே தவெகவில் இணைந்து வருவதாக விளக்கம் அளித்துள்ளார். எவ்வாறாயினும், உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ள இந்த விவகாரம், வரவிருக்கும் இடைத்தேர்தல் களம் மற்றும் தமிழக அரசியல் சூழலை உற்றுநோக்க வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *