பாஜகவில் இருந்து அண்மையில் விலகிய அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, தான் தொடங்கியுள்ள ‘வீ த லீடர்ஸ்’ (We The Leaders) இயக்கத்தின் முதல் மாநாட்டில் தனது புதிய அரசியல் மற்றும் மதக் கொள்கை குறித்து மிக ஆவேசமாகப் பேசியுள்ளார். பொள்ளாச்சியில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாநாட்டில் உரையாற்றிய அவர், மதச்சார்பற்ற மற்றும் சாதியற்ற மாற்று அரசியலை முன்னிறுத்திப் பேசியது தமிழக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத அடையாளங்கள் குறித்துப் மேடையில் ஓப்பனாகப் பேசிய அண்ணாமலை, “நான் ஒரு இந்து, நெற்றியில் திருநீறும் குங்குமமும் அணிபவன் தான்; ஆனால் வீட்டை விட்டு வெளியே வரும்போது எனது சாதியையும் மதத்தையும் வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்துவிட்டுத்தான் வருகிறேன்” என்று அதிரடியாகக் குறிப்பிட்டார். ஒவ்வொரு முறையும் மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய அவர், அனைத்து மனிதர்களையும் சமமாக நடத்துவதே உண்மையான இந்து தர்மம் என்றும், ஒருவரை உயர்ந்தவராகவும் மற்றொருவரைத் தாழ்ந்தவராகவும் பேசுவது தர்மம் அல்ல என்றும் தனது புதிய இந்து தத்துவத்தை விளக்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘வீ த லீடர்ஸ்’ இயக்கம் தற்காப்பு மற்றும் சமுதாயப் பணிகளுக்காகத் தொடங்கப்பட்டாலும், இது வெறும் சமூக அமைப்பாக மட்டும் நின்றுவிடாது என்றும், சரியான நேரத்தில் இது ஒரு அரசியல் கட்சியாக உருவெடுக்கும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். குறிப்பாக, தங்களது அமைப்பில் 39 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 54 விழுக்காடு என்ற பிரம்மாண்ட பலத்துடன் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இளைய தலைமுறையினரான ‘ஜென்சி’ (Gen Z) வாக்காளர்கள் தான் தமிழக அரசியலின் எதிர்காலத்தை எழுதப் போகிறார்கள் என்றார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த இளைஞர்கள் ஒரு பெரும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதைப் போல, வரும் 2031-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் மற்றுமொரு மாபெரும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்சி மாற்றத்தை இந்த ஜென்சி இளைஞர்கள் நிச்சயம் உருவாக்குவார்கள் என்று அண்ணாமலை 2031-க்கான தனது மாஸ்டர் பிளானை வெளியிட்டார். குடும்ப அரசியல் மற்றும் குறுகிய சுயநல அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பட்டிதொட்டியெங்கும் உள்ள படித்த, நேர்மையான புதிய தலைவர்களை உருவாக்குவதே தங்களது இலக்கு என்றும் அவர் அந்த மேடையில் திட்டவட்டமாக முழங்கினார்.