தமிழக நெடுஞ்சாலைத்துறையில் (Highways Department) நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடியான ஒரு கொள்கை முடிவை எடுத்துள்ளார். நெடுஞ்சாலைத்துறையின் கீழ் தனியாக இயங்கி வந்த பிரத்தியேக “சென்னை மெட்ரோ பிரிவு” (Chennai Metro Wing) முற்றிலும் தேவையற்றது எனக் கண்டறியப்பட்டு, அது அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, அந்தப் பிரிவில் பணியாற்றி வந்த தலைமைப் பொறியாளர்கள், கோட்டப் பொறியாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அனைவரும் சென்னைக்கு வெளியே பிற மாவட்டங்களுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த கால ஆட்சிகளின் போது சென்னை மெட்ரோ பிரிவின் மூலம் செயல்படுத்தப்பட்ட பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களில் கடுமையான வடிவமைப்பு குறைபாடுகள், தரமற்ற கட்டுமானங்கள் மற்றும் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விரிவான ஆய்வின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை கோயம்பேடு மேம்பாலம், மேடவாக்கம் மற்றும் மூலக்கடை மேம்பாலத் திட்டங்கள், கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) விரிவாக்கத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் ஆகியவற்றில் திட்டமிடல் குறைபாடுகளும், நிதி இழப்புகளும் ஏற்பட்டது இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நடத்திய துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில், நெடுஞ்சாலைத்துறையில் ஏற்கனவே உள்ள ‘கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பிரிவு’ (Construction and Maintenance Wing) பணிகளைத் தடையின்றி மேற்கொள்ளப் போதிய அதிகாரிகளைக் கொண்டுள்ள நிலையில், சென்னைக்கு எனத் தனியாக ஒரு மெட்ரோ பிரிவு இருப்பது தேவையற்ற கூடுதல் பணியிடங்களையும், நிர்வாகக் குளறுபடிகளையுமே உருவாக்கியுள்ளது என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், கடந்த இரண்டு மாதங்களாகப் புதிய டெண்டர்கள் எதுவும் கோரப்படாமல், பழைய திட்டங்களின் தரம் மற்றும் நிதிப் பயன்பாடு குறித்து தீவிரப் பரிசீலனை நடைபெற்று வருகிறது. மெட்ரோ பிரிவு மட்டுமின்றி, நபார்டு (NABARD) பிரிவு மற்றும் ஊரகச் சாலைகள் பிரிவுகளும் கலைக்கப்பட்டு, அங்கிருந்த அதிகாரிகளும் திருச்சி, மதுரை, கோவை போன்ற மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
“நெடுஞ்சாலைத்துறையில் கடந்த காலங்களில் இருந்த கமிஷன் நடைமுறைகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, அனைத்து ஒப்பந்தப் பணிகளும் முழு வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்படும்” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். முறைகேடுகளில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடரும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால், நெடுஞ்சாலைத்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.