Posted in

வெனிசுலா மீதும் ராணுவ நடவடிக்கைக்கு தயாராகும் அமெரிக்கா- என்ன நடக்கிறது ?

வெனிசுலா மீதும் ராணுவ நடவடிக்கைக்கு தயாராகும் அமெரிக்கா- என்ன நடக்கிறது ? - Image 1

வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோவைப் பதவியில் இருந்து அகற்றிய பிறகு, அங்கு அமைக்கப்பட்டுள்ள இடைக்கால அரசுக்கு அமெரிக்கா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ, செனட் சபையில் வழங்க உள்ள அறிக்கையில், “வெனிசுலாவின் இடைக்கால அதிகாரிகள் எங்கள் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்; தவறினால் ராணுவ பலத்தைப் பயன்படுத்த அமெரிக்கா தயங்காது” என்று குறிப்பிட்டுள்ளார். ஜனவரி தொடக்கத்தில் மதுரோவைக் கைது செய்ய அமெரிக்கா நடத்திய ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு, ரூபியோ அதிகாரப்பூர்வமாக அளிக்கும் முதல் சாட்சியம் இது என்பதால் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெனிசுலாவில் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான அமெரிக்காவின் “படிநிலைத் திட்டத்திற்கு” (Stage-based plan) இடைக்கால அதிகாரிகள் எவ்வளவு தூரம் ஒத்துழைக்கிறார்கள் என்பதை அமெரிக்கா மிக நெருக்கமாகக் கண்காணிக்கும் என்று ரூபியோ தெரிவித்துள்ளார். “மதுரோவுக்கு ஏற்பட்ட கதி என்ன என்பது டெல்சி ரோட்ரிக்ஸிற்கு நன்றாகவே தெரியும். எனவே, அவர் தனது சொந்த நலனைக் கருதி எங்களது முக்கிய நோக்கங்களை நிறைவேற்ற முன்வருவார் என்று நம்புகிறோம்,” என ரூபியோ மறைமுக மிரட்டல் விடுத்துள்ளார். ஒருவேளை பேச்சுவார்த்தை போன்ற மற்ற வழிமுறைகள் தோல்வியடைந்தால், இறுதி ஆயுதமாக ராணுவத்தைப் பயன்படுத்த அதிபர் ட்ரம்ப் தயாராக இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த ராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் (Congress) முன்கூட்டியே அனுமதி பெறவில்லை என்ற விமர்சனங்களுக்கு ரூபியோ விளக்கம் அளித்துள்ளார். “இது ஒரு போரோ அல்லது ஒரு நாட்டை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையோ அல்ல. சட்டத்தை நிலைநாட்ட உதவும் ஒரு சிறிய ராணுவ நடவடிக்கை மட்டுமே,” என்று அவர் வாதிட்டுள்ளார். தற்போது வெனிசுலாவில் அமெரிக்கப் படைகள் தரைப்பகுதியில் நிலைநிறுத்தப்படவில்லை என்றும், அதனால் இதற்கு நாடாளுமன்ற அனுமதி தேவையில்லை என்றும் ட்ரம்ப் நிர்வாகம் தனது செயலை நியாயப்படுத்தி வருகிறது.

இருப்பினும், இந்த விவகாரத்தில் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் சில குடியரசுக் கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். நாட்டின் முக்கிய சட்டமியற்றுபவர்களுக்குக் கூடத் தெரியாமல் இதுபோன்ற அதிரடி ராணுவ நடவடிக்கைகளை அதிபர் மேற்கொள்வது ஜனநாயகத்திற்கு அழகல்ல என்று அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிபரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் “போர் அதிகாரத் தீர்மானம்” (War powers resolution) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், வெனிசுலா விவகாரத்தில் ட்ரம்ப் தனது பிடியை மேலும் வலுப்படுத்தத் தொடங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *