Posted in

கிட்னி திருட்டு விகாரத்தை கையிலெடுத்த தமிழக அரசு – தவறு செய்தவர் எவரா இருந்தாலும் தப்ப முடியாது!

தமிழ்நாட்டை உலுக்கிய சட்டவிரோதக் கிட்னி திருட்டு விவகாரத்தில், எவ்வித அரசியல் தலையீடும் இன்றி மிக நேர்மையான முறையில் விசாரணை நடத்தப்பட்டுத் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் உறுதி அளித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் ஏழை நெசவுத் தொழிலாளர்களைக் குறிவைத்து அரங்கேறிய இந்த மனித உறுப்பு வர்த்தக மோசடி தொடர்பாக, முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி நாமக்கல் நீதித் துறை நடுவர் மன்றத்தில் (Judicial Magistrate Court) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மூன்று தனியார் மருத்துவமனைகள் மற்றும் இதில் தொடர்புடைய மருத்துவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் அருண்ராஜ், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலுக்குக் (TNMC) பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். “ஏற்கனவே கூறியது போலவே, எந்தவொரு வெளிப்படையான நோக்கமுமின்றி, நேர்மையான முறையில் விசாரணையும் நீதிமன்ற நடவடிக்கைகளும் தொடரும் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்று அவர் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

அதேவேளையில், மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் நிலை குறித்துப் பேசிய அமைச்சர், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூலை வரை டெங்கு பாதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்களுடன் விளக்கினார். 2024-ஆம் ஆண்டில் சுமார் 23,000 ஆகவும், 2025-இல் 11,000 ஆகவும் இருந்த டெங்கு பாதிப்புகள், 2026-ஆம் ஆண்டில் ஜூலை 21 வரை 9,000 ஆகக் குறைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார். இருப்பினும், களத்தில் உள்ள மருத்துவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் கொசு ஒழிப்புப் பணியாளர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருவதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் அருண்ராஜ், அரசின் தடுப்பு முயற்சிகளுக்குப் பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு அவசியம் என வேண்டுகோள் விடுத்தார். வீடுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நன்னீர் தேங்காமல் பார்த்துக்கொண்டால் மட்டுமே கொசு உற்பத்தியைத் தடுத்து டெங்குவை முழுமையாக ஒழிக்க முடியும் என்பதால், பொதுமக்கள் அனைவரும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.