Posted in

பேச்சுவார்த்தை நடத்த உங்களைத் தடுத்தது எது? – கேள்விக் கணைகளைத் தொடுத்த அண்ணாமலை!

நாடு முழுவதும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாஜாக தலைமையிலான மத்திய அரசை நோக்கிப் பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும் ‘வீ தி லீடர்ஸ்’ (We The Leaders) அமைப்பின் நிறுவனருமான கே. அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிக் கடுமையாக விமர்சித்துள்ளார். “போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுடன் அர்த்தமுள்ள உரையாடலையும் பேச்சுவார்த்தையையும் தொடங்க மத்திய அரசு ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது?” என்று அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இளநிலை நீட் தேர்வு வினாத்தாள் மூன்று முறை கசிந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள அண்ணாமலை, தொடர்ச்சியாக அரங்கேறும் இத்தகைய முறைகேடுகளால் பல லட்சக்கணக்கான மாணவர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். எளிய மற்றும் விளிம்புநிலை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கும் நோக்கில் தாம் இத்தனை நாட்களாக நீட் தேர்வுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வந்ததாகக் குறிப்பிட்ட அவர், வினாத்தாள் கசிவு சம்பவங்களுக்கு இதுவரை ஆட்சியாளர்களோ அதிகாரிகளோ யாரும் பொறுப்பேற்காதது ஏன் என்றும் சாடியுள்ளார்.

ஜனநாயக நாட்டில் தங்கள் உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் போராடுவது மாணவர்களின் அடிப்படை உரிமையாகும் என்று குறிப்பிட்ட அண்ணாமலை, போராட்டம் தீவிரமடைந்து உச்சக்கட்டத்தை எட்டும் வரை அமைதி காத்துவிட்டு, பேச்சுவார்த்தையைத் தாமதப்படுத்தியது ஏன் என வினவினார். மாணவர்களுடன் உடனடியாக நேர்மையான மற்றும் வெளிப்படையான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுச் சிக்கலுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் எனவும், நாட்டின் கல்வி முறையின் மீது இளைஞர்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்றும் வலியுறுத்தினார்.

அதேவேளையில், தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக அறவழியில் போராடி வரும் மாணவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார். மாணவர் போராட்டத்திற்கு எவ்வித சம்பந்தமும் இல்லாத சுயநல சக்திகள் அல்லது அரசியல் அமைப்புகள் போராட்டக் களத்திற்குள் நுழைந்து, அதன் நோக்கத்தைச் சிதைக்கவும் திசைதிருப்பவும் முயற்சி செய்யக்கூடும் என்பதால், அத்தகைய தொடர்பில்லாத நபர்களுக்குக் களத்தில் இடம் கொடுத்துவிடக் கூடாது எனப் போராட்டக்காரர்களுக்கு அவர் முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.