தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது எவ்விதப் பழிவாங்கும் நடவடிக்கையோ அல்லது சட்டரீதியான வழக்குகளோ தொடரப்படக் கூடாது என மத்திய அரசு உறுதியளித்தால் மட்டுமே தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடப் போவதாகச் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் அதிரடி நிபந்தனை விதித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங்கிற்கு இது தொடர்பாகக் காரசாரமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
மத்திய அமைச்சர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்கு நேரில் சென்று வாங்சுக்கைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தேர்வு முறைகேடுகளால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது மற்றும் கல்வித்துறைப் சீர்திருத்தங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பது ஆகிய வாங்சுக்கின் முதன்மை கோரிக்கைகளை நேர்மறையாகப் பரிசீலிப்பதாக அமைச்சர்கள் உறுதியளித்தனர்.
இருப்பினும், டெல்லி காவல் துறையினரின் அடக்குமுறையையும் கடந்து அமைதி வழியில் போராடிய மாணவர்கள் மீது பொய் வழக்குகளையோ அல்லது கைது நடவடிக்கைகளையோ மேற்கொள்ளக் கூடாது என வாங்சுக் வலியுறுத்தியுள்ளார். “நேர்மையான கல்வி அமைப்பைக் கோரி நியாயமான முறையில் குரல் எழுப்பியது மட்டுமே இந்த இளைஞர்கள் செய்த ஒரே குற்றம்” எனக் குறிப்பிட்டுள்ள அவர், மாணவர்களின் எதிர்காலத்தைப் பலிகடா ஆக்கிவிட்டுத் தான் போராட்டத்தை வாபஸ் பெற முடியாது என்பதில் உறுதியாக உள்ளார்.
அரசிடமிருந்து அதற்கான அதிகாரப்பூர்வ உறுதிமொழி வெளிவந்த உடனேயே, தானும் போராட்டத்தைக் கைவிட்டு மாணவர்களைக் கலைந்து செல்லுமாறு வேண்டுகோள் விடுக்கத் தயார் என வாங்சுக் தெரிவித்துள்ளார். 65-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து உண்ணாவிரதத்தை முடிக்குமாறு கேட்டுக்கொண்ட போதிலும், மாணவர்களின் பாதுகாப்புக்கே முதலிடம் என வாங்சுக் நிபந்தனை விதித்துள்ளது மத்திய அரசுக்கு நெருக்குதலை ஏற்படுத்தியுள்ளது.