மத்திய கிழக்கில் ஈரானுடன் தொடர்ந்து நடைபெற்று வரும் போரில் வீரமரணம் அடைந்த நான்கு அமெரிக்க ராணுவ வீரர்களின் உடல்கள் தாய்நாடு திரும்பிய நிலையில், டெலாவேரில் உள்ள டோவர் விமானப்படை தளத்தில் (Dover Air Force Base) நடைபெற்ற ராணுவ மரியாதையுடன் கூடிய ‘கௌரவ உடல் ஏற்பு’ (Dignified Transfer) நிகழ்வில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார். அமெரிக்கக் கொடி போர்த்தப்பட்ட பேழைகளில் வந்திறங்கிய வீரர்களின் உடல்களுக்கு ராணுவ ரீதியிலான மரியாதையை அவர் வழங்கினார்.
ஜோர்டான் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இந்த நான்கு வீரர்களும் உயிரிழந்தனர். உயிரிழந்த வீரர்கள் கைலெர் ஜேம்ஸ் ஃfeeஹான் (25), இசபெல்லா கோன்சலஸ் (19), ஏஞ்சல் எஸ். ராம்பேர்சாட் (28) மற்றும் மைக்கேல் இமானுவேல் ஸ்விண்டன் (30) என அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அதிகாரப்பூர்வமாக அடையாளப்படுத்தியுள்ளது. நிகழ்வுக்கு முன்பாகப் பலியான வீரர்களின் குடும்பத்தினரை அதிபர் டிரம்ப் தனியாகச் சந்தித்துத் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்குச் செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், “ஒரு நாட்டிற்கு அதிபராக இருந்து செய்ய வேண்டிய பணிகளிலேயே மிகவும் கடினமான மற்றும் நெஞ்சை உருக்கும் கடமை இதுதான். தாய்நாட்டிற்காகத் தங்களது உயிரைத் தியாகம் செய்த இந்த மகத்தான மாவீரர்களைக் கௌரவிப்பது நமது கடமை. உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினரிடம் ‘நாங்கள் உங்களை நேசிக்கிறோம், உங்கள் பிள்ளைகளை நேசிக்கிறோம்’ என்பதைத் தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை” என உருக்கமாகப் பேசினார்.
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய கூட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இதுவரை 18 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் 440-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஈரான் அணுஆயுதம் பெறுவதைத் தடுப்பதற்காகவும் அமெரிக்காவின் பாதுகாப்பிற்காகவுமே இந்த வீரர்கள் போரிட்டதாகக் குறிப்பிட்ட டிரம்ப், அவர்களின் தியாகம் வீண் போகாது என்றும் அமெரிக்க வீரர்களின் இழப்பிற்கு ஈரான் மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும் என்றும் மீண்டும் எச்சரித்துள்ளார்.