தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விமலுக்கு, ரூ. 4.5 கோடி காசோலை மோசடி (Cheque Bounce) வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை 11-வது சிறு வழக்குகள் விசாரணை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடன் தொகையைத் திரும்பச் செலுத்த அவர் வழங்கிய காசோலையில் போதிய பணமில்லாமல் திரும்பிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த 2018-ஆம் ஆண்டு நடிகர் விமலின் சொந்தத் தயாரிப்பில் வெளியான ‘மன்னர் வகையறா’ திரைப்படத்திற்காக, சினிமா பைனான்சியர் கோபி என்பவரிடம் அவர் ரூ. 4.5 கோடி கடனாகப் பெற்றுள்ளார். படம் வெளியான பிறகும் கடன் தொகையைத் திரும்பத் தராமல் காலதாமதம் செய்து வந்த விமல், பின்னர் தொகையை ஈடுசெய்யக் காசோலையாகக் (Cheque) கொடுத்துள்ளார். ஆனால், அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது விமலின் கணக்கில் போதிய பணமில்லை எனக்கூறி வங்கி நிர்வாகம் காசோலையைத் திருப்பி அனுப்பியது.
இதனால் அதிர்ச்சியடைந்த பைனான்சியர் கோபி, காசோலை மோசடி சட்டத்தின் கீழ் நடிகர் விமல் மீது சென்னை 11-வது சிறு வழக்குகள் விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இச்சேவை தொடர்பான வழக்கு விசாரணை நீண்டகாலமாக நடைபெற்று வந்த நிலையில், ஏற்கனவே நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான நடிகர் விமலிடம் சாட்சியங்கள் மற்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஆர்த்தி, விமல் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்த நீதிபதி, அவர் வாங்கிய கடனுக்கான முழுத் தொகையையும் உடனடியாகத் திரும்பச் செலுத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். அதேவேளையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய விமல் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மேல்முறையீடு செய்வதற்காகத் தண்டனையை ஒரு மாத காலத்திற்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.