Posted in

 யார் உங்களுக்கு அந்த உரிமையைக் கொடுத்தது?  போராடும் மாணவர்கள் மீதான தாக்குதலுக்குப் பா.ரஞ்சித் கடும் ஆவேசம்!

நீட் தேர்வுக்கு எதிராகச் சென்னையில் அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். சென்னை எழும்பூரில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், “மக்களுக்காகவும் மாணவர்களுக்காகவும் குரல் கொடுக்கும் அமைதி வழியிலான போராட்டங்களை ஒடுக்கத் தமிழக அரசுக்கு யார் உரிமை கொடுத்தது?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்போராட்ட மேடையில் தனது சமூக அனுபவங்களை உருக்கமாகப் பகிர்ந்த பா.ரஞ்சித், சாதியக் கட்டமைப்பால் தான் எதிர்கொண்ட நிராகரிப்புகளையும், தலித் மற்றும் பின்தங்கிய சமூக மாணவர்கள் சந்திக்கும் பதற்றங்களையும் வெளிப்படையாகப் பேசினார். “கல்வி என்பது அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும். ஆனால் தற்போதைய கல்வி முறை பொருளாதார ரீதியாகவும் சாதி ரீதியாகவும் மேல்-பள்ளங்களை உருவாக்கி சமத்துவத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது” என்று சுட்டிக்காட்டிய அவர், நீட் தேர்வு ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை முடக்கிப் பணக்காரர்களுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதாகச் சாடினார்.

நீட் தேர்வில் வெறும் 120 மதிப்பெண்கள் எடுத்தவர்கள்கூடப் பண பலத்தால் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் அவலநிலை நிலவுவதாகக் சுட்டிக்காட்டிய இயக்குநர், “இட ஒதுக்கீடு மூலம் தலித்துகளும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் உள்ளே வருவதை விமர்சிப்பவர்கள், பணம் இருந்தால் குறைந்த மதிப்பெண் எடுத்தவனுக்கும் சீட் கிடைக்கும் இந்த அநீதியை ஏன் தட்டி கேட்கவில்லை?” எனக் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார். நீட் தேர்வில் முறைகேடுகள் நிறைந்துள்ளதை மறைத்து, இட ஒதுக்கீட்டை மட்டும் குற்றஞ்சாட்டுவது மிகவும் கவலையளிப்பதாக அவர் ஆதங்கப்பட்டார்.

பாஜக போன்ற பாசிசக் கொள்கை கொண்ட கட்சிகள் போராட்டங்களை ஒடுக்குவதை எதிர்பார்க்கலாம் எனக் குறிப்பிட்ட பா.ரஞ்சித், “சமூகநீதியையும் பாசிச எதிர்ப்பையும் பேசும் தமிழக அரசு, போராடும் மாணவர்கள் மீது காவலர்களை வைத்துக் கொடூரமாகத் தாக்குவது ஏன்?” என நேருக்கு நேராகக் கேள்வி எழுப்பினார். மேலும், சீருடையில் பெயர் பேட்ஜ் (Name Badge) கூட இல்லாமல் வந்து மாணவர்களைத் தாக்கும் அளவுக்குக் கோழைகளாக மாறவேண்டாம் என்றும், மாணவர்களுக்கான போராட்ட களத்தை அரசே முறையாக ஒதுக்கித்தர வேண்டும் என்றும் அவர் அரசிடம் வலியுறுத்தினார்.