இஸ்லாமியக் குடியரசான ஈரான் அணு ஆயுதங்களைக் கைப்பற்ற ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார். அமெரிக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் (EPA) தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய அவர், ஈரான் இன்னும் அமைதி உடன்படிக்கைக்குத் தயார்நிலைக்கு வரவில்லை என்றும், அந்நாடு சில “தீய எண்ணங்களை” (Evil Intentions) கொண்டு செயல்பட்டு வருவதாகவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
மத்திய கிழக்கில் இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ மோதல் தீவிரமடைந்து வரும் சூழலில், அமெரிக்கா ஈரானுக்கு எதிராக மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், ஈரான் அணு ஆயுதம் பெறுவது குறித்து யோசிப்பதைக் கூட அமெரிக்கா அனுமதிக்காது என்றார். “ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைக் கையில் எடுக்க முடியாது; இந்த நடவடிக்கை முந்தைய அமெரிக்க அதிபர்களாலேயே எடுக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அவர்கள் செய்யாததை நாங்கள் செய்து முடிக்கிறோம்” என்று அவர் உறுதியளித்தார்.
தனது முதல் ஆட்சிக் காலத்தில் அமெரிக்க ராணுவத்தைப் பலப்படுத்தியதாக நினைவு கூர்ந்த ட்ரம்ப், தற்போது எதிர்ப்பார்த்ததை விட அதிகமாகவே ராணுவப் பலத்தைப் பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார். இதேவேளையில், ஈரானிய துறைமுகங்களில் இருந்து கப்பல்கள் நுழைவதையோ அல்லது வெளியேறுவதையோ தடுக்கும் வகையில் செங்கடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் தடைகளை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) தீவிரப்படுத்தியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும் ஈரானுக்கு எதிரான அழுத்தம் தொடரும் எனத் தெரிவித்துள்ள நிலையில், ஈரான் தனது நடவடிக்கைகளுக்குப் பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார். அதேவேளையில், ஈரானியப் புரட்சிகரக் காவல் படையும் (IRGC) பிராந்தியத்திலுள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாக அறிவித்துள்ளதால், மத்திய கிழக்கில் அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் உச்சக்கட்ட பதற்றத்தை எட்டியுள்ளது.