Posted in

முஜ்தபா கமேனி குறித்து அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட ரகசிய அறிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்ட தலைவராகப் பொறுப்பேற்றுள்ள முஜ்தபா கமேனி, தனது தந்தையும் முன்னாள் தலைவருமான அலி கமேனியை விட அணுஆயுதங்களைத் தயாரிப்பதில் அதிக விருப்பமும் முனைப்பும் காட்டி வருவதாக அமெரிக்க உளவு அமைப்புகளின் புதிய மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு ஈரானில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்திற்கு மத்தியில், நாட்டின் அணுஆயுதக் கொள்கையில் ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படும் இந்தத் தகவல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள தகவல்களின்படி, மறைந்த முன்னாள் தலைவர் அலி கமேனி அணுஆயுதங்கள் உருவாக்குவதற்கு எதிராக மதபோதனைக் கட்டுப்பாடுகளைக் (Fatwa) கடைப்பிடித்து வந்ததோடு, அதில் சில தயக்கங்களையும் கொண்டிருந்தார். ஆனால், தற்போதைய புதிய தலைவரான முஜ்தபா கமேனியிடம் அதுபோன்ற தயக்கங்கள் எதுவும் இல்லை என்றும், ஈரானைப் பாதுகாக்கவும் எதிர்காலத் தாக்குதல்களைத் தடுக்கவும் அணுஆயுதக் கட்டுப்பாடு மட்டுமே ஒரே வழி என்று கருதும் கடினப்போக்குக் கொண்ட பிரிவினருக்கு அவரிடம் ஆதரவு பெருகி வருவதாகவும் உளவுத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

போர் தீவிரமடைந்துள்ள போதிலும், ‘பிக்ஏக்ஸ் மவுண்டன்’ (Pickaxe Mountain) என அழைக்கப்படும் நடான்ஸ் (Natanz) பகுதியின் ஆழமான நிலத்தடி வளாகத்திற்கு ஆயிரக்கணக்கான செறிவூட்டல் உபகரணங்களை (Centrifuges) ஈரான் பாதுகாப்பாக மாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. வான்வழித் தாக்குதல்களால் அழிக்க முடியாத அளவிற்கு அதீத பாதுகாப்புடன் கட்டப்பட்டுள்ள இந்த நிலத்தடி மையங்களில், அணுஆயுதத் தயாரிப்பிற்கான நடவடிக்கைகளை ஈரான் தீவிரப்படுத்தக்கூடும் என அமெரிக்க உளவுத்துறை கணித்துள்ளது.

இருப்பினும், முஜ்தபா கமேனி அணு குண்டு தயாரிக்கத் தூண்டும் வகையில் பகிரங்க அறிவிப்புகள் எதையும் இதுவரை வெளியிடவில்லை என்றும், இந்த உளவுத் தகவல்கள் போருக்கு முந்தைய உரையாடல்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் திரட்டப்பட்டவை என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எவ்வாறாயினும், ஈரானின் புதிய தலைமையின் இந்த அணுஆயுத லட்சிய நகர்வுகள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய மூலோபாயக் கணக்குகளை மாற்றி அமைப்பதுடன், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே கொழுந்துவிட்டு எரியும் போரின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் எனக் கருதப்படுகிறது.