Posted in

என்னையவே விலக சொல்லுவீங்களா?  கட்சி நிர்வாகிகளிடம் சீமான் ஆவேசம்: வைரலாகும் ஆடியோவால் நாம் தமிழரில் பரபரப்பு!

நாம் தமிழர் கட்சியின் (NTK) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது கட்சி நிர்வாகிகளிடம் ஆவேசமாகப் பேசும் குரல் பதிவு ஒன்று இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தர்மபுரி மண்டல ஒருங்கிணைப்பாளரை மாற்ற வேண்டும் எனத் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அவர்களிடம் சீமான் கோபப்பட்டுப் பேசிய பேச்சுக்கள் அடங்கிய இந்த ஆடியோ பதிவு அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலர், மண்டல ஒருங்கிணைப்பாளரின் செயல்பாடுகள் சரியில்லை என்றும், அவரை உடனடியாக அந்தப் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து சீமானிடம் முறையிட்டுள்ளனர். நிர்வாகிகளின் கோரிக்கையைக் கேட்ட சீமான், உடனடியாகப் பதவியை மாற்றுவது சாத்தியமில்லை எனக் கூறியதாகத் தெரிகிறது. அதற்கு நிர்வாகிகள் சிலர், “ஒருங்கிணைப்பாளரை மாற்றாவிட்டால் நாங்கள் கட்சியிலிருந்து விலகுவோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

நிர்வாகிகளின் இந்த முடிவால் கடும் கோபமடைந்த சீமான், “என்னையே விலகச் சொல்வீர்களா? நீங்களாகவே விரும்பித்தான் கட்சிக்கு வந்தீர்கள், உங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை” எனக் கடிந்துகொண்டு பேசியுள்ளார். மேலும், “கட்சியில் நீடிப்பதும் விலகுவதும் உங்கள் விருப்பம்; ஆனால் என்னிடம் நிபந்தனைகள் விதிக்கக் கூடாது” என்றும் ஆவேசமாக ஆடியோவில் பேசியுள்ளார்.

ஏற்கனவே நாம் தமிழர் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் சிலர் அடுத்தடுத்து விலகி மாற்று முகாம்களுக்குச் சென்று வரும் சூழலில், சீமானின் இந்தத் காரசாரமான ஆடியோ பதிவு வெளியாகியுள்ளது தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உட்கட்சிப் பூசல் மற்றும் நிர்வாகிகளின் எதிர்ப்பை சீமான் கையாண்ட விதம் குறித்து சமூக வலைதளங்களில் ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு விவாதங்கள் கிளம்பியுள்ளன.