Posted in

வினாத்தாள் கசிவுக்கு முற்றுப்புள்ளி! நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்து பிரதமர் மோடி அதிரடி!

நீட் (NEET) உள்ளிட்ட தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுத்து, தேர்வு முறையை முற்றிலும் நம்பகமானதாகவும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் மாற்ற இன்போசிஸ் (Infosys) இணை நிறுவனரும் தொழில்நுட்ப வல்லுநருமான நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு (High-Powered Task Force) அமைக்கப்படுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில், தேர்வு அமைப்பில் மிகப்பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் நோக்கத்துடன் பிரதமர் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளார்.

தேசியத் தேர்வு முகமையின் (NTA) கட்டமைப்பு மற்றும் தேர்வு நடத்தும் முறையைத் தொழில்நுட்ப உதவியுடன் முழுமையாக மறுசீரமைக்க இந்த உயர்மட்ட பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. நிலேகனி தலைமையிலான இந்த உயர்மட்டக் குழுவில் இஸ்ரோ (ISRO) முன்னாள் தலைவர் எஸ். சோமநாத், உளவுத்துறையின் (IB) முன்னாள் இயக்குநர் தபன் டேகா, சென்னை ஐஐடி இயக்குநர் வி. காமகோடி, முன்னாள் கல்விச் செயலாளர் அனிதா கர்வால் மற்றும் உள்கட்டமைப்பு நிபுணர் அம்ரித் லால் மீனா உள்ளிட்ட முன்னணி நிபுணர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சமூக வலைதளங்களில் வீடியோ செய்தி மூலம் மாணவர்க உரையாற்றிய பிரதமர் மோடி, “நமது நாட்டின் தேர்வு முறை மிகவும் நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும், தொழில்நுட்ப ரீதியாகப் பலமிக்கதாகவும் இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். வினாத்தாள் தயாரிப்பு, விநியோகம் முதல் தேர்வு முடிவுகள் வெளியீடு வரையிலான முழு சுழற்சியிலும் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, முறைகேடுகள் நடக்காத வகையில் கவச அமைப்பை உருவாக்குவதற்கான பரிந்துரைகளை நிலேகனி குழு வழங்கும் என்றும், அதன் அறிக்கையின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் மீது விரைவாக விசாரணை நடத்தத் தனி விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பிரதமர், நாடாளுமன்றத்தில் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான புதிய கடுமையான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் கூறினார். மத்தியக் கல்வி அமைச்சகத்தின் மாற்றங்கள் மற்றும் புதிய உயர்மட்டக் குழுவின் நியமனம் ஆகியவை, நாட்டின் தேர்வு முறையின் மீது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.