கர்நாடக அரசு மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில், தமிழக நீர்வளத்துறை மற்றும் அமைச்சர்களின் அலட்சியமானப் போக்கு காரணமாகவே தமிழகத்தின் காவிரி உரிமைகள் தொடர்ந்து பறிபோய் கொண்டிருப்பதாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் கடுமையாகச் சாடியுள்ளார். “அடிமுட்டாள்கள் அமைச்சரானால் நாடு இப்படித்தான் சீரழியும்” எனக் காரசாரமாக விமர்சித்து அவர் வெளியிட்ட அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
கர்நாடக மாநில அரசு மேகதாது அணை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயார் செய்து மத்திய அரசிடம் ஒப்புதல் கோரி வரும் நிலையில், தமிழக அரசு இதனைத் தடுப்பதற்குப் போதுமான சட்டப் போராட்டங்களையோ அல்லது உறுதியான அரசியல் நடவடிக்கைகளையோ எடுக்கவில்லை என்பது விவசாயிகளின் முக்கியக் குற்றச்சாட்டாக உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த தமிழக அமைச்சர் ஒருவர், மேகதாது விவகாரம் தொடர்பாகத் தெளிவற்ற மற்றும் அலட்சியமானக் கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அமைச்சரின் இந்த பேட்டி குறித்துக் காரசாரமாக எதிர்வினையாற்றியுள்ள இடும்பாவனம் கார்த்திக், “காவிரி நதிநீர்ப் பங்கீட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றமும், காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் தமிழகத்திற்கு வழங்கியத் தீர்ப்புகளைக் காற்றில் பறக்கவிட்டு கர்நாடகா தன்னிச்சையாகச் செயல்படுகிறது. இத்தகைய ஆபத்தான கட்டத்தில், தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியப் பொறுப்பில் உள்ள அமைச்சர்கள் விஷயத்தின் தீவிரத்தைப் புரியாமல் பொறுப்பற்ற முறையில் பேசி வருகின்றனர்” என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
தமிழகத்தின் கடைமடைப் பகுதி விவசாயிகள் பாசனத்திற்குத் தண்ணீரின்றித் தவிக்கும் நிலை உருவாகியுள்ள சூழலில், மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டினால் தஞ்சை டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். உடனடியாகத் தமிழக அரசு அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் கூட்டத்தைக் கூட்டி, மேகதாது அணை கட்டுமானத்தைத் தடுக்க உச்ச நீதிமன்றத்தில் வலுவான அவசர மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.