Posted in

அமெரிக்காவின் ‘மாயக்’ கப்பல்.. நடுங்கும் ஈரான்! வெடிக்குமா உலகப்போர்?

அமெரிக்காவின் ‘மாயக்’ கப்பல்.. நடுங்கும் ஈரான்! வெடிக்குமா உலகப்போர்? - Image 1

அமெரிக்காவின் ‘மாயக்’ கப்பல்.. நடுங்கும் ஈரான்! ஹவுதி, ஹெஸ்பொல்லா கிளர்ச்சியாளர்கள் பாய்ச்சல் – வெடிக்குமா உலகப்போர்?

ஈரானில் நிலவி வரும் உள்நாட்டுப் போராட்டங்களை அந்நாட்டு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அமெரிக்கா தனது அதிநவீன USS ஆபிரகாம் லிங்கன் மற்றும் துணைப் போர்க்கப்பல்களை ஈரான் எல்லையை நோக்கி அனுப்பியுள்ளது. இந்த நகர்வு மத்திய கிழக்கில் பெரும் போருக்கான அச்சத்தை விதைத்துள்ளது. ஈரானிய மக்களின் போராட்டத்திற்கு அமெரிக்கா வெளிப்படையான ஆதரவை வழங்கியதோடு, அந்நாட்டு அரசுக்கு நேரடி ராணுவ எச்சரிக்கையையும் விடுத்துள்ளதால் பதற்றம் தணியாமல் நீடிக்கிறது.

இந்த நெருக்கடியின் உச்சகட்டமாக, ஈரானை நெருங்கிய அமெரிக்கப் போர்க்கப்பல்களை கண்டுபிடிக்க முடியாமல் ஈரான் ராணுவம் கடும் திணறலுக்கு உள்ளாகியுள்ளது. உலகிலேயே நவீனமான ட்ரோன்கள் மற்றும் செயற்கைக்கோள் வசதிகளைக் கொண்டுள்ள போதிலும், அமெரிக்கா தனது போர்க்கப்பல்களில் உள்ள Automatic Identification System (AIS) எனப்படும் தானியங்கி அடையாள அமைப்பை அணைத்து வைத்துள்ளதால், அந்தக் கப்பல்கள் எங்கே இருக்கின்றன என்பதைத் துல்லியமாகக் கணிக்க முடியாமல் ஈரான் விழிபிதுங்கி நிற்கிறது.

அமெரிக்காவின் இந்த ரகசிய வியூகத்தால் ஆத்திரமடைந்துள்ள ஈரானின் ஆதரவுப் படைகளான ஹவுதி மற்றும் ஹெஸ்பொல்லா கிளர்ச்சியாளர்கள், தற்போது பகிரங்கமாக அமெரிக்காவிற்கு மிரட்டல் விடுத்துள்ளனர். செங்கடல் வழியாக வரும் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாக யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சூசகமாகத் தெரிவித்துள்ளனர். இதேபோல், ஈராக்கின் ஹெஸ்பொல்லா அமைப்பும் ஈரானைக் குறிவைக்கும் எந்தவொரு தாக்குதலுக்கும் நேரடி பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

ஈரானுக்குள் தற்போது நிலவி வரும் பொருளாதார வீழ்ச்சியும், பணவீக்கமும் மக்களை வீதிக்குக் கொண்டு வந்துள்ளது. போராட்டக்காரர்கள் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த உள்நாட்டுப் பிரச்சினையைச் சாதகமாக்கி அமெரிக்கா நேரடியாகத் தலையிடுவது ஈரானுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. ஒருபுறம் மக்கள் புரட்சி, மறுபுறம் அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் என ஈரான் இருமுனைத் தாக்குதல்களைச் சந்தித்து வருகிறது.

தற்போது மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் ஒரு வெடிமருந்து கிடங்கின் மேல் அமர்ந்திருப்பது போன்ற சூழல் நிலவுகிறது. அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் எந்த நேரத்திலும் தாக்குதலைத் தொடங்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், ஈரான் மற்றும் அதன் ஆதரவுப் படைகளின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதே உலக நாடுகளின் கவலையாக உள்ளது. இந்த மோதல் ஒருவேளை முழு அளவிலான போராக மாறினால், அது உலகப் பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *