தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலி மற்றும் பேரூரில் நடைபெற்று வரும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு தீவிர ஆய்வு மேற்கொண்டார். சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் கீழ் இயங்கி வரும் 110 எம்.எல்.டி மற்றும் 150 எம்.எல்.டி உற்பத்தி திறன் கொண்ட நெம்மேலி ஆலைகளின் தற்போதைய செயல்பாடுகளை அவர் முதலில் கேட்டறிந்தார். பொதுமக்கள் அனைவருக்கும் தங்குதடையின்றி, தட்டுப்பாடற்ற முறையில் குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் இந்த ஆய்வின் போது அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை மக்களின் நீண்ட கால குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், பேரூர் பகுதியில் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை (JICA) நிதியுதவியுடன் ரூ.5,814 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வரும் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் (MLD) உற்பத்தி திறன் கொண்ட புதிய கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்தார். ஆசியாவிலேயே மிகப்பாரிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களில் ஒன்றாகத் திகழும் இந்த நிலையத்தின் பணிகளை, திட்டமிட்ட காலத்திற்குள் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த அதிநவீன புதிய ஆலையில் கடல்நீரை உறிஞ்சும் உள்கட்டமைப்பு, கடல்நீரைச் சுத்திகரிக்கும் வழிகட்டி அமைப்புகள் மற்றும் தலைகீழ் சவ்வூடுபரவல் (Reverse Osmosis – RO) தொழில்நுட்ப முறைகள் குறித்து முதலமைச்சர் விரிவாகக் கேட்டறிந்தார். ஆழ்கடலில் 2,500 மில்லிமீட்டர் விட்டமுள்ள பிரம்மாண்ட எச்.டி.பி.இ (HDPE) குழாய்கள் பதிக்கப்பட்டு, கடல்சார் உள்கட்டமைப்புப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருவதை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். மேலும், பேரூரிலிருந்து போரூர் வரை 59 கிலோமீட்டர் தூரத்திற்கு குடிநீரைக் கொண்டு செல்வதற்கான பிரதான குழாய்கள் பதிக்கும் பணிகளின் தற்போதைய நிலவரத்தையும் அவர் ஆய்வு செய்தார்.
தற்போது சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகள் மற்றும் நெம்மேலியின் தற்போதைய ஆலைகள் மூலம் நாளொன்றுக்கு 1,230 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், நடப்பு ஆண்டின் இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரவிருக்கும் இந்த புதிய பேரூர் 400 எம்.எல்.டி ஆலை மூலம் சென்னை, தாம்பரம் மாநகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 22 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் நேரடியாகப் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.