புகழ்பெற்ற ‘டெக்ஸ்டர்’ (Dexter) தொடரின் தீவிர ரசிகரான இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் டெஸ்பரோ (40) என்ற நபர், தனது இரு நண்பர்களைக் கொடூரமான முறையில் கொலை செய்து, உடல்களைத் துண்டு துண்டாக வெட்டிக் காட்டுப் பகுதியில் வீசிய குற்றத்திற்காக ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டுத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். வின்செஸ்டர் கிரவுன் நீதிமன்றம் இவருக்கு இறுதி மூச்சு இருக்கும் வரை சிறை தண்டனை (Whole-life Order) வழங்கி வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பளித்துள்ளது.
பிரிட்டனின் கார்ன்வால் பகுதியில் உள்ள காட்டில் தனது குடிசை அருகே வாழ்ந்து வந்த டெஸ்பரோ, அங்குத் தங்கியிருந்த கிளாரியோ அகிலினோ (57) மற்றும் டேனியல் கோல்மேன் (43) ஆகிய இரு நண்பர்களை மிகக் கொடூரமாகக் கொலை செய்தார். கொலைக்குச் பின்னர் இருவரின் உடல்களையும் துண்டு துண்டாக வெட்டி, சில பாகங்களை எாித்து ஆற்றிலும், எஞ்சிய பாகங்களை ஆழமற்ற குழி தோண்டியும் மறைக்க முயன்றார். ‘டெக்ஸ்டர்’ தொடரில் வருவது போல உடல்களைத் துண்டு துண்டாக வெட்டும் காட்சிகள் தனக்கு மிகவும் பிடிக்கும் எனத் தடயவியல் அதிகாரிகளிடம் அவர் கூறியது விசாரணையில் அம்பலமானது.
போலீசார் ஐந்து மாதங்களுக்கும் மேலாக நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், காட்டில் இருந்து எரிக்கப்பட்ட 1,900 எலும்புத் துண்டுகளையும் துண்டிக்கப்பட்ட உடல் பாகங்களையும் மீட்டனர். கொலைக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர்களின் வங்கி அட்டைகளைப் பயன்படுத்திப் பணம் எடுத்த டெஸ்பரோ, அவர்கள் உயிருடன் இருப்பது போல் போலியான தகவல்களையும் பரப்ப முயன்றார். மேலும், இந்த வழக்கு விசாரணையின் போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, குரட்டை விட்ட காரணத்திற்காகத் தனது சக கைதியான ஸ்டீவன் கெம்ப்ஸ்டர் என்பவரையும் அவர் கழுத்தை நெரித்துக் கொன்ற அதிர்ச்சி தகவலும் வெளியானது.
மூன்று பேரைக் கொடூரமாகக் கொன்ற தொடர் கொலையாளியான ஜேம்ஸ் டெஸ்பரோ, மனித நேயமற்ற முறையில் கொடூரச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக நீதிபதி திரு. சைனி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். “இவருக்கு மனித உயிர்கள் மீது எவ்வித மரியாதையும் இல்லை; இவர் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தான நபர்” எனக் கூறி நீதிமன்றம் இவருக்குக் கருணையற்ற ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.