Posted in

பிரிட்டன் எல்லையில் ரஷ்ய போர்க்கப்பல்கள் & சைபர் ஊடுருவல்கள்! ‘இது தொடக்கம் மட்டுமே’ – பிரிட்டன் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!

லண்டன்: பிரிட்டனின் கடல் எல்லைப் பகுதிகள் மற்றும் முக்கியக் கடல்சார் தொலைத்தொடர்புக் கேபிள்களைக் குறிவைத்து ரஷ்யா நடத்தி வரும் ஊடுருவல்கள் மற்றும் சைபர் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதாகவும், இது ரஷ்ய அதிபர் புடினின் பெரிய அளவிலான சதித்திட்டத்தின் ‘சிறிய பகுதி மட்டுமே’ (Tip of the iceberg) என்றும் இங்கிலாந்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அண்மைத் தகவல்களின்படி, கடந்த ஓராண்டில் மட்டும் பிரிட்டனின் பிரத்யேகப் பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) நுழைய முயன்ற 90-க்கும் மேற்பட்ட ரஷ்யப் போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை வழிமறித்துக் கண்காணிக்கப் பிரிட்டிஷ் கடற்படை (Royal Navy) 116 முறை அவசரமாக முடுக்கவிடப்பட்டுள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற நகர்வுகளை விட 30 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, பிரிட்டனின் இணையவழிக் தகவல்தொடர்பு மற்றும் எரிசக்தி விநியோகத்திற்கு மூலாதாரமாக விளங்கும் வட அட்லாண்டிக் கடலடி கேபிள்கள் (Undersea Cables) மற்றும் குழாய்களை இலக்கு வைத்து ரஷ்யாவின் ‘அகுலா-கிளாஸ்’ (Akula-class) அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதை பிரிட்டனின் ஆர்ஏஎஃப் (RAF) ரோந்து விமானங்கள் மற்றும் கடற்படை போர்க்கப்பல்கள் கண்டறிந்து கண்காணித்துள்ளன. அதேபோல், அரசு அமைப்புகள் மற்றும் முக்கியமான நிறுவனங்களின் தகவல் அமைப்புகளை முடக்கும் சைபர் தாக்குதல்களையும் ரஷ்ய ஹேக்கர்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

ரஷ்யாவின் சர்வதேச பொருளாதாரத் தடைகளை மீறி எண்ணெய் கடத்தலில் ஈடுபடும் ரஷ்ய ஆதரவு ‘நிழற்படை கப்பல்களை’ (Shadow Fleet) இங்கிலாந்து கடற்படை நேரடியாக மறித்து நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த மறைமுக மோதல் போக்கு மேலும் உச்சமடைந்துள்ளது. உக்ரைன் போருக்கு மத்தியில் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பைச் சோதிக்கும் நோக்கில் ரஷ்யா மேற்கொள்ளும் இந்தத் தொடர் தூண்டுதல்கள் நேட்டோ (NATO) கூட்டமைப்பு நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.