தமிழக முதலமைச்சர் விஜய் குறித்துப் பொதுக்கூட்டத்தில் ஆவேசமாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுப் பின்னர் பிணையில் வெளியே வந்துள்ள விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன், தனது பேச்சு மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனக்கு அளித்த அறிவுரைகள் குறித்து ஊடகங்களிடம் மனம் திறந்து பேசியுள்ளார்.
முன்னதாகக் கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மார்க்கண்டேயன், “சட்டமன்றக் கதவுகளை மூடிவிட்டுப் பேசுவேன் என்று கூறும் முதலமைச்சரைச் சட்டமன்றத்திற்குள் சந்தித்து அவரது எலும்பை உடைப்போம்” என்று தூத்துக்குடி வட்டார வழக்கிலான ஆவேச மொழியில் பேசியிருந்தார். இக்கூற்றுக்கு எதிராகத் தவெக சார்பில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட அவர், தற்போது உயர் நீதிமன்ற நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சிறையிலிருந்து வெளிவந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்கண்டேயன், இச்சம்பவம் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன்மிடம் கூறிய வார்த்தைகளை விவரித்தார். “தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட கிராமப்புறங்களில் ஆவேசமாகவோ அல்லது உரிமையோடு பேசும்போதோ ‘இரும்புக் உடம்புக்காரன்’, ‘எலும்பை உடைப்பேன்’ என்று சொல்வது எங்களது வட்டார வழக்குச் சொல் (Regional Dialect). ஆனால், அரசியல் நாகரிகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கான கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு, இத்தகைய வார்த்தைகளைப் பொதுவெளியில் தவிர்த்திருக்க வேண்டும் என்று தலைவர் மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டி அறிவுறுத்தினார்” எனக் குறிப்பிட்டார்.
மேலும், தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் சட்டமன்ற உரிமைக்குழு பரிந்துரைகளைச் சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த அவர், மக்கள் நலனுக்காகவும் திமுகவின் கொள்கைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் கூறினார். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனின் இந்த விளக்கமும், மு.க. ஸ்டாலினின் அறிவுரை குறித்த பகிரங்கப் பேச்சும் அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.