Posted in

NATO அமைப்பைச் சோதிக்கத் துடிக்கும் புடின்? – அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கையால் உலக அரங்கில் பெரும் பரபரப்பு!

உக்ரைன் போரில் நிலவி வரும் தேக்கநிலை மற்றும் மேலைநாடுகளின் ராணுவக் கையிருப்பு குறைந்து வருவதைப் பயன்படுத்தி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேட்டோ (NATO) கூட்டமைப்பு நாடுகளின் மீது தாக்குதல் நடத்தி அவர்களின் உறுதிப்பாட்டைச் சோதிக்கக்கூடும் என அமெரிக்க உளவுத்துறை திடுக்கிடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளின் புதிய மதிப்பீடுகளின்படி, ரஷ்யா நேட்டோ உறுப்பு நாட்டின் மீது குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட தாக்குதலை (limited attack) நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பகுதிகளில் சிறிய அளவிலான தரைவழி ஊடுருவல்கள் அல்லது முக்கியமான உள்கட்டமைப்புகள் மீதான இணையவழி (Cyberattack) மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் மூலம் நேட்டோவின் கூட்டுப் பாதுகாப்பு விதியைச் சோதிக்கக் கிரெம்ளின் முயலலாம் என வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, அமெரிக்கா மற்றும் மேலைநாடுகளிடம் நீண்டதூர ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் கையிருப்பு பற்றாக்குறையாக உள்ள இந்தச் சூழலை ரஷ்யா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடும் என அமெரிக்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். உக்ரைனுக்குத் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட ராணுவ உதவிகள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிய மோதல்கள் காரணமாக அமெரிக்கப் படைகளின் குறிப்பிட்ட சில ஆயுதக் கிடங்குகள் சரிவைச் சந்தித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

இருப்பினும், ரஷ்யா நேட்டோ மீது நேரடி தாக்குதல் நடத்தும் வாய்ப்பு குறைவு என்றும், உக்ரைன் போரில் கவனம் செலுத்தி வரும் ரஷ்யாவிற்கு நேட்டோவை நேரடியாகப் பகைத்துக் கொள்ளும் திறன் தற்போது இல்லை என்றும் சில ஐரோப்பியப் பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்க உளவுத்துறையின் இந்த அறிக்கை, உறுப்பு நாடுகள் தங்கள் ஆயுத உற்பத்தியையும் எல்லையோரப் பாதுகாப்பையும் விரைவுபடுத்தவே வெளியிடப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.