ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய எல்லையில் இருந்து சுமார் 2,000 கிலோமீட்டர் (1,200 மைல்கள்) தொலைவில் உள்ள உரல் மலைப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான யேகாடெரின்பர்க்கில் (Yekaterinburg) உக்ரைன் ராணுவம் தொலைதூர டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷ்யாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ‘வைல்டுபரிஸ்’ (Wildberries) நிறுவனத்திற்குச் சொந்தமான பிரம்மாண்டமான சேமிப்புக் கிடங்கை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
டிரோன் தாக்குதலைத் தொடர்ந்து, கிடங்கின் கூரை பகுதியில் தீப்பிடித்துப் புகை மண்டலம் சூழ்ந்தது. தாக்குதல் நடந்த உடனடியாக அங்குப் பணியில் இருந்த சுமார் 800 தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். மூன்று டிரோன்கள் கூரையைத் தாக்கியபோதிலும், பெரும்பாலான பொருட்கள் சேதமடையாமல் காப்பாற்றப்பட்டதாக வைல்டுபரிஸ் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ரஷ்யாவின் அமேசான்” என்று அழைக்கப்படும் வைல்டுபரிஸ் நிறுவனத்தின் கிடங்குகளை இலக்கு வைத்து உக்ரைன் தாக்குதல் நடத்துவது இது முதன்முறையல்ல. கடந்த சில வாரங்களில் மட்டும் இந்நிறுவனத்தின் டஜன் கணக்கிலான சேமிப்புக் கிடங்குகள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ரஷ்ய ராணுவத்திற்குத் தேவையான ஏவுகணை பாகங்கள், டிரோன் சாதனங்கள் மற்றும் வழிகாட்டும் கருவிகளை விநியோகிக்கும் மையமாக இக்கிடங்குகள் பயன்படுத்தப்படுவதாகக் கூறி, உக்ரைன் தன் தாக்குதல்களை நியாயப்படுத்தி வருகிறது.
எல்லைப்பகுதிகளைத் தாண்டி ரஷ்யாவின் உள்பகுதிகளில் உள்ள உள்கட்டமைப்புகள் மற்றும் வர்த்தக மையங்களை இலக்கு வைப்பதன் மூலம், போரின் தாக்கத்தை ரஷ்ய மக்களுக்கு உணர்த்தவும், எதிரியின் பொருளாதார விநியோகச் சங்கிலியை முடக்கவும் உக்ரைன் திட்டமிட்டுள்ளது. சொந்தமாக உருவாக்கப்படும் நீண்டதூர தாக்குதல் டிரோன்கள் மூலம் ரஷ்யாவின் ஆழமான பகுதிகளுக்குள் உக்ரைன் நடத்தி வரும் இந்தத் தொடர் தாக்குதல்கள் உலகளவில் உற்றுநோக்கப்பட்டு வருகின்றன.