தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாலியல் விழிப்புணர்வு காட்சியைப் பார்த்த 8 வயது சிறுமி ஒருவர், தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து தந்தையிடம் தைரியமாகத் தெரிவித்ததை அடுத்து, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த முதியவர் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழும் நிலையில், அவர்களின் 8 வயது மகளும், 11 வயது மகனும் தந்தையின் பாதுகாப்பில் வசித்து வருகின்றனர். வீட்டு வேலை செய்து வரும் தாய், தனது பிள்ளைகளை அவ்வப்போது தான் வேலை செய்யும் கோடம்பாக்கம் பகுதி வீட்டிற்கு அழைத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில், சமீபத்தில் தந்தை தனது பிள்ளைகளுடன் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்க்க திரையரங்கிற்குச் சென்றுள்ளார்.
திரைப்படத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் குறித்தும், குழந்தைகளுக்கு ‘குட் டச், பேட் டச்’ (Good Touch, Bad Touch) என்றால் என்ன என்பது குறித்தும் விஜய் விளக்கும் விழிப்புணர்வு காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அத்துடன், பெண் குழந்தைகளுக்குத் தவறான தொடுதல் நேர்ந்தால் உடனடியாகப் பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதைப் பார்த்த அச்சிறுமி, தனது தாய் வேலை பார்த்த வீட்டில் வசிக்கும் நபர் ஒருவர் தனக்கு இதுபோன்று தவறான தொந்தரவு கொடுத்ததாகத் தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் கூற்றைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை, உடனடியாக வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரைப் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். சினிமாவில் வைக்கப்பட்ட ஒரு விழிப்புணர்வுக் காட்சி, சிறுமிக்குத் துணிச்சலைத் தந்து குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்திய சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.