Posted in

விஜய் கூட்டிய கூட்டத்தை புறக்கணிக்க முடிவு! – எம்பிக்கள் கூட்டத்தில் திமுக கனிமொழி வைத்த அதிரடி செக்

ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறவிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MP) கலந்தாய்வுக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக திமுக முறைப்படி அறிவித்துள்ளது. இது குறித்து திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும் எம்பியுமான கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக அரசு நடத்தும் இந்த அரசியல் நாடகத்தில் திமுக பங்கேற்காது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை குறித்துத் திருத்தப்பட்ட சட்ட வரைவு ஏதும் அதிகாரப்பூர்வமாகக் கையில் கிடைக்கப்பெறாத சூழலில், இக்கூட்டத்தின் அவசியம் என்ன என்ற கேள்வியை கனிமொழி எம்பி எழுப்பியுள்ளார். தொகுதி மறுவரையறை எனும் ஆபத்தை முதன்முதலில் சுட்டிக்காட்டி அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும், இந்திய அளவிலான தலைவர்களை அழைத்து கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தையும் கூட்டியவர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் என்பதை அவர் நினைவு கூர்ந்தார். 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தொகுதிகள் வரையறுக்கப்பட வேண்டும் என்பதில் திமுகவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், காவிரி விவகாரம் மற்றும் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராகத் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தி வரும் நிலையில், அதைக் கூட்டாமல் தவெக அரசு மௌனம் சாதிப்பதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை அனைத்து எம்பிக்களுடன் சென்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரிடம் வழங்கத் தவெக அரசு முன்வருமா என்றும், காவிரிப் பிரச்சினையில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இந்த அவசர எம்பிக்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாகவும் கனிமொழி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இக்கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட பல்வேறு தோழமைக் கட்சிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை எனத் அறிவித்துள்ளன. முதன்மை எதிர்க்கட்சிகளின் இந்த அதிரடி புறக்கணிப்பு முடிவால், தவெக அரசு ஏற்பாடு செய்திருந்த எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் பெரும் அரசியல் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.