தமிழக அரசால் புதிதாக அறிவிக்கப்பட்டு உள்ள ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் விமர்சகர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், இந்த திட்டத்தைக் கொண்டு வந்ததற்கான முக்கியக் காரணம் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண் ராஜ் விரிவான விளக்கமளித்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதைத் தடுப்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறுகையில், கடந்த 2017-19 காலகட்டத்தில் தமிழக அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் விகிதம் 65.8 சதவீதமாக இருந்த நிலையில், 2025-26 காலக் கட்டத்தில் அது 51 சதவீதமாகச் சரிந்துள்ளது என்றார். எளிய மற்றும் ஏழை நடுத்தரக் குடும்பங்கள் தனியார் மருத்துவமனைகளில் அதிகக் கட்டணம் செலுத்திப் பிரசவம் பார்ப்பதில் கடும் நிதி நெருக்கடியைச் சந்திக்கின்றன. எனவே, அரசு மருத்துவமனைகளை நோக்கி தாய்மார்களை ஊக்குவிப்பதற்காகவே முதலமைச்சர் விஜய்யின் வழிகாட்டுதலில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் மற்றும் பெட்டகம் வழங்கும் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கு ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் இத்திட்டம் முறைப்படி அமல்படுத்தப்பட உள்ளது. மருத்துவமனைகளில் தகுந்த வசதிகளை மேம்படுத்துவதுடன், இதுபோன்ற ஊக்கத் திட்டங்கள் மூலம் மட்டுமே தாய்மார்களுக்கு அரசு மருத்துவத்துறை மீதான நம்பிக்கையை அதிகரிக்க முடியும் என்று அமைச்சர் அருண் ராஜ் கூறினார்.
மேலும், தமிழகத்தில் கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate) 1.3 ஆகக் குறைந்துள்ளதையும், அதை உயர்த்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய அமைச்சர், பிரசவக் காலத்தில் ஏழைத் தாய்மார்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் அரசு இலவசமாக வழங்கும் என்று உறுதியளித்தார். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதில் அளித்த அவர், “அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கையை உயர்த்தி, தாய்-சேய் நலனைப் பாதுகாப்பதே இத்திட்டத்தின் உண்மையான நோக்கம்” என்று தெளிவுபடுத்தினார்.