மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் ‘யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன்’ (USS Abraham Lincoln) என்ற பிரம்மாண்டப் போர்விமானக் கப்பலில் பணியாற்றி வரும் கடற்படை வீரர்கள் சிலர், பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் தாங்க முடியாமல் கப்பலில் இருந்து கடலில் குதித்துத் தற்கொலை செய்ய முயன்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக 9 மாதங்களுக்கும் மேலாகக் கடலில் முகாமிட்டுள்ளதால், வீரர்களின் மனநலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்களின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஈரான் உடனான பதற்றமான சூழல் காரணமாக மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவம் தனது கண்காணிப்பையும் போர்ப் பயிற்சிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதில் சுமார் 5,000 கடற்படை வீரர்கள் மற்றும் மரைன் படையினர் யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் பணியாற்றி வருகின்றனர். கடந்த மே மாதமே இவர்களது பணி நிறைவடைந்து தாய்நாடு திரும்ப வேண்டிய நிலையில், பணிக்காலம் அறிவிப்பின்றித் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால், கடந்த சில வாரங்களில் மட்டும் பல வீரர்கள் கப்பலில் இருந்து கடலில் குதிக்க முயன்றதாகவும், சக வீரர்கள் அவர்களைச் சமயோசிதமாகத் தடுத்துக் காப்பாற்றியதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொடர் பணிக்காலம் மட்டுமன்றி, கப்பலில் அடிப்படை வசதிகள் சீர்குலைந்துள்ளதும் வீரர்களின் மன உளைச்சலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. போதிய உணவுப் பொருட்கள் கிடைக்காத நிலை, சுவையான உணவு பற்றாக்குறை, செயல்படாத கழிப்பறைகள், சுகாதாரமின்மை மற்றும் கடுமையான பணி நேரங்கள் காரணமாகப் பல வீரர்கள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் முற்றிலுமாகச் சோர்வடைந்துள்ளனர். மன அழுத்தத்தில் கடலில் குதிக்க முயன்ற வீரர்கள் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட வீரர்களின் குடும்பத்தினர் அமெரிக்கக் கடற்படையின் உயர்மட்ட அதிகாரிகளுடன் அவசரக் கலந்தாய்வு நடத்தித் தங்களது அச்சத்தைப் பகிர்ந்து கொண்டனர். இதனை ஏற்றுக்கொண்ட அமெரிக்கக் கடற்படை அதிகாரிகள், வீரர்களின் மனநிலையைக் கையாளக் ஆலோசகர்கள் மற்றும் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலுக்குப் பதிலாக ‘யு.எஸ்.எஸ் தியோடோர் ரூஸ்வெல்ட்’ கப்பலை மாற்றாக அனுப்பும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உறுதியளித்துள்ளனர்.