Posted in

புடினின் பிரம்மாண்ட அரண்மனைக்கு ஆபத்து! – பாதுகாப்பு வளையத்தை தகர்த்து உக்ரைன் அதிரடி ட்ரோன் தாக்குதல்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்குச் சொந்தமான கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள அதிநவீன மற்றும் பிரம்மாண்டமான அரண்மனையை (Gelendzhik Palace) இலக்கு வைத்து உக்ரைன் ராணுவம் மிகப்பெரிய தாக்குதலுக்கு ஆயத்தமாகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அரண்மனைக்குப் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்த ரஷ்யாவின் அதிநவீன எஸ்சி-400 (S-400) வான் பாதுகாப்பு ஏவுகணைத் தளத்தை உக்ரைனின் ட்ரோன் படைகள் தகர்த்தெறிந்துள்ளதைத் தொடர்ந்து இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் கெலன்ட்ஜிக் (Gelendzhik) பகுதியில் அமைந்துள்ள இந்த சொகுசு அரண்மனைக்கு சுமார் 12 மைல் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த எஸ்சி-400 ஏவுகணை ஏவுதளத்தைக் குறிவைத்து உக்ரைனின் ட்ரோன்கள் அண்மையில் தாக்குதல் நடத்தின. உக்ரைன் ஆளில்லா வான்வழிப் படைப் பிரிவின் தளபதி மேஜர் ராபர்ட் புரோவ்டி (Robert Brovdi) வெளியிட்டுள்ள தகவலின்படி, தாக்குதலுக்கு உள்ளான ஏவுகணை ஏவுதளம் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாகத் தீப்பற்றி எரிந்து முற்றிலும் நாசமானது செயற்கைக்கோள் படங்களின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, புடினின் அரண்மனையைச் சுற்றி 20 கிலோமீட்டர் சுற்றளவிற்கு செயற்கைக்கோள் தொடர்புகள் மற்றும் ட்ரோன்களின் சிக்னல்களைத் துண்டிக்கும் ‘வோல்னா குபோல் காரன்ட்’ (Volna Kupol Garant) என்ற மின்னணு போர் மையத்தையும் உக்ரைன் படைகள் வெற்றிகரமாகச் செயலிழக்கச் செய்தன. ரஷ்யாவின் முக்கிய ரேடார் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் அடுத்தடுத்து அழிக்கப்பட்டதால், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புடினின் பங்களா அரண்மனை தற்போது நேரடி ட்ரோன் தாக்குதல்களுக்கு உள்ளாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

நீச்சல் குளம், திரையரங்கம், ஹெலிபேட் மற்றும் சொகுசு வசதிகள் கொண்ட இந்த அரண்மனை வளாகத்தை ரஷ்யா இதுவரை மிக பலத்த பாதுகாப்பு வளையத்தில் வைத்திருந்தது. தற்போது அந்தப் பாதுகாப்பு கவசங்கள் உடைக்கப்பட்டுள்ளதால், ரஷ்யாவின் ஆழமான பகுதிக்குள் நுழைந்து புடினின் மிக முக்கிய அடையாளங்கள் மீது உக்ரைன் அடுத்தகட்டமாகப் பிரம்மாண்டமான துல்லியத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகப் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.