Posted in

நீண்டகாலப் போருக்குத் தயாராகும் ஈரான்? – இராணுவத் தலைமையில் அதிரடி மாற்றங்கள்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைகள் முட்டுக் கட்டையில் முடிந்துள்ள நிலையில், ஈரான் தனது பாரம்பரியப் பாதுகாப்பு உத்தியிலிருந்து விலகி “தாக்குதல் சார்ந்த போர் முறைக்கு” (Offensive Doctrine) மாறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காக நாட்டின் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி, ஈரானியப் புரட்சிப் படையின் (IRGC) மூத்த தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை உயர் பதவிகளில் அமர்த்தி இராணுவத்தின் தலைமைக்கட்டமைப்பையே முற்றிலும் மாற்றியமைத்துள்ளார்.

போர் மற்றும் அமைதி உடன்படிக்கைகள் சார்ந்த பேச்சுவார்த்தைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால், நீண்டகாலப் போருக்குத் தயாராகும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. “சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும் பட்சத்தில், இனி எதிரிகளின் சொந்த நிலப்பரப்பிற்குள்ளேயே நேரடியாகச் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட அமைப்பாக ஈரானியப் படைகள் மாற்றப்பட்டுள்ளன” என ஈரானியப் புரட்சிப் படையின் தளபதி முகமது ரெசா நக்தி அரசுத் தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய கட்டமைப்பின் கீழ், ஈரானிய தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராகப் புரட்சிப் படையின் தீவிரப்போக்குக் கொண்ட மூத்த தளபதி மொஹ்சென் ரெசாய் நியமிக்கப்பட்டுள்ளார். தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை விட இராணுவ வலிமையே தற்போதைய சூழலில் முதன்மையானது என்பதை உணர்த்தவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெஹ்ரான் மூலோபாய ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், ஏவுகணை உற்பத்தியைத் தீவிரப்படுத்துவது மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியின் (Strait of Hormuz) கடல்சார் கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்வதும் ஈரானின் புதிய திட்டத்தில் அடங்கும்.

அதேவேளையில், போரினால் ஏற்படும் கடுமையான பொருளாதாரச் சரிவு மற்றும் உள்நாட்டு மக்கள் மத்தியில் எழக்கூடிய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புக் குரல்களை அடக்கவும் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புப் படைகளுக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இராணுவக் கட்டமைப்பில் செய்யப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட மாற்றம், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அடுத்த கட்டப் போர்ப் பதற்றத்தை மேலும் பலமடங்கு அதிகரித்துள்ளது.