பிரிட்டனின் கிழக்கு சசெக்ஸ் (East Sussex) மாகாணத்தில் உள்ள லூயிஸ் (Lewes) ரயில் நிலையம் அருகே பயணிகள் ரயில் ஒன்று திடீரென தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளான சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ரயிலின் பெட்டிகள் பக்கவாட்டில் சாய்ந்து கவிழ்ந்ததில், அதற்குள் ஏராளமான பயணிகள் சிக்கிக்கொண்டதாக வெளியாகும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
தெற்கு ரயில்வே (Southern Rail) சேவைக்குச் சொந்தமான இந்த பயணிகள் ரயில் லூயிஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, பிற்பகல் 3:54 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தண்டவாளத்தை விட்டு விலகியதில் குறைந்தது இரண்டு ரயிலின் பெட்டிகள் தலைகீழாகக் கவிழ்ந்துள்ளன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பிரிட்டிஷ் போக்குவரத்து காவல் துறை (BTP), தீயணைப்புப் படையினர் மற்றும் அவசர மருத்துவக் குழுவினர் கவிழ்ந்த பெட்டிகளுக்குள் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்து குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன. இந்த விபத்தைத் தொடர்ந்து, பிரைட்டன், லூயிஸ் மற்றும் ஈஸ்ட்போர்ன் உள்ளிட்ட முக்கியப் பாதைகளில் இயக்கப்படும் ரயில் சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், அப்பகுதியில் பயணம் செய்யும் பயணிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், ரயில் சேவைகளில் பெரும் தாமதம் ஏற்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக எச்சரித்துள்ளது.
இந்தக் கொடூர விபத்து குறித்துப் பிரிட்டன் போக்குவரத்துத்துறைச் செயலாளர் ஹெய்டி அலெக்சாண்டர் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். “பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மீட்புக் குழுவினர் களத்தில் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர ரயில்வே துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார். விபத்துக்கான முதன்மை காரணம் என்ன என்பது குறித்துத் தொழில்நுட்ப வல்லுநர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.