Posted in

உத்தராகண்டில் கொடூரம்! – பிப்பல்கோடி சுரங்கத்திற்குள் புகுந்த வெள்ளம்: 6 தொழிலாளர்கள் பலி, மீட்புப்பணி வீச்சு!

உத்தராகாண்ட் மாநிலம் சமோலி (Chamoli) மாவட்டம் பிப்பல்கோடி அருகே அமைந்திருக்கும் டி.எச்.டி.சி (THDC) நீர்மின் திட்டத்திற்குச் சொந்தமான கட்டுமானச் சுரங்கத்திற்குள் வியாழக்கிழமை மாலை திடீரென வெள்ளமும் மண்சரிவுச் சேறும் புகுந்ததில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 14 தொழிலாளர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மாயமான எஞ்சிய 2 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

விஷ்ணுகாட் – பிப்பல்கோடி 444 மெகாவாட் நீர்மின் திட்டத்திற்காக (Vishnugad-Pipalkoti Hydroelectric Project) மாயாபூர் பகுதியில் 2 கி.மீ நீளத்திற்குச் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. மாலை 6:45 மணியளவில் தொழிலாளர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, மேல் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாகச் சுரங்கத்திற்குள் பெரும் பிளவு (Cavity) ஏற்பட்டு, விண்ணதிரும் சத்தத்துடன் அதிகளவிலான சேறும் தண்ணீரும் கடகடவென உள்ளே பாய்ந்தது. இதில் அங்கிருந்த 22 தொழிலாளர்கள் உடனடியாக உள்ளேயே முடங்கினர்.

தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை (ITBP), இந்திய ராணுவம் மற்றும் உள்ளூர் போலிஸார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சுரங்கத்திற்குள் தேங்கியுள்ள நீரையும் சேற்றையும் வெளியேற்ற சக்திவாய்ந்த மோட்டார் பம்புகள் மற்றும் கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மீட்கப்பட்ட 14 காயமடைந்த தொழிலாளர்கள் உடனடியாக கோபேஷ்வர் மற்றும் பிப்பல்கோடியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள உத்தராகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மீட்புப் பணிகளை நேரடியாகக் கண்காணித்து வருகிறார். மேலும் ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர்களுடன் தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார். 2023-ல் உத்தரகாசியின் சில்க்யாரா சுரங்கப் பாதையில் ஏற்பட்ட விபத்தை நினைவுபடுத்தும் வகையில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.