அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்குப் பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் வைர வர்த்தக மையம் (AWDC) சார்பில் 321 வைரங்கள் பதித்த பளபளக்கும் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்ட சில வாரங்களிலேயே, ஐரோப்பிய வைரங்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்க அரசு ரத்து செய்திருப்பது பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. சுமார் 25,000 முதல் 35,000 டாலர் மதிப்பிலான இந்த மோதிரத்தில் 321 வைரங்கள், நீலக்கல், மரகதம் மற்றும் டிரம்பைக் குறிக்கும் ‘T’ வடிவ வைரம் பதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக ஜூன் இறுதியில் பெல்ஜியத்திலுள்ள அமெரிக்கத் தூதரிடம் இந்த சொகுசு மோதிரம் டிரம்பிற்காகக் கைமாற்றப்பட்டது. ஆனால், இந்த ஆடம்பரப் பரிசு அளிக்கப்பட்ட சில வாரங்களிலேயே, ஜூலை 24 அன்று ஐரோப்பிய இயற்கை வைரங்களுக்கான இறக்குமதி வரியை 0 சதவீதமாகக் குறைத்து டிரம்ப் நிர்வாகம் அதிரடி விலக்கு அளித்தது. இதன் மூலம் பெல்ஜியத்தின் வைரத் தொழில் துறை ஆண்டுதோறும் சுமார் 200 மில்லியன் டாலர் (சுமார் ₹1,600 கோடி) வரிச் சுமையிலிருந்து தப்பியுள்ளது.
இந்தத் திடீர் வரி விலக்கு நடவடிக்கை அமெரிக்க அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “பரிசுகளைக் கொடுத்து அதிபர் டிரம்பை விலைக்கு வாங்க பெல்ஜியம் நிறுவனங்கள் முயன்றுள்ளனவா?” எனக் கேள்வி எழுப்பியுள்ள ஜனநாயகக் கட்சி செனட்டர்களான எலிசபெத் வாரன் மற்றும் ரிச்சர்ட் புளூமெந்தால், இது அமெரிக்கக் கூட்டாட்சி லஞ்ச ஒழிப்புச் சட்டங்களை மீறும் செயல் என்றும், இதில் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
அதேவேளையில், இந்த குற்றச்சாட்டுகளைப் பெல்ஜியம் வைர வர்த்தகக் கூட்டமைப்பு மற்றும் வெள்ளை மாளிகை ஆகிய இரண்டும் திட்டவட்டமாக மறுத்துள்ளன. “அமெரிக்க சுதந்திர தின வரலாற்று நிகழ்வைக் சிறப்பிக்கும் வகையிலேயே இந்த மோதிரம் வடிவமைக்கப்பட்டுப் பரிசளிக்கப்பட்டதே தவிர, இறக்குமதி வரி விவகாரத்திற்கும் இதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை” என ஆண்ட்வெர்ப் மையம் விளக்கம் அளித்துள்ளது. எனினும், இந்த விவகாரம் டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான புதிய காரசார விவாதங்களை உருவாக்கியுள்ளது.