Posted in

ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசுடன் வர்த்தக பேச்சுவார்த்தை: காபூல் சென்றது உயர் ரஷ்யக் குழு

ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசுடன் வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதிப்பதற்காக ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்ஸி ஓவர்சுக் தலைமையிலான உயர்நிலைக் குழுவினர் காபூல் நகருக்கு வருகை தந்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்தப் பயணம் அமைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் அரசிடம் இருந்து ரஷ்யாவுடன் உறவுகளை மேம்படுத்துவதில் தீவிர ஆர்வம் காணப்படுவதாகத் ரஷ்யத் தரப்பு தெரிவித்துள்ளது.

போக்குவரத்து, தளவாடங்கள், விவசாயம் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த ரஷ்யக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் உரத் தயாரிப்பு ஆலைகளை நேரடியாக அமைப்பது மற்றும் தேவையான உரங்களை வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்து 349 மில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளதாகக் கூட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதி செய்வதற்காக ஆப்கானிஸ்தானுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் துணைப் பிரதமர் அலெக்ஸி ஓவர்சுக் இன்டர்பாக்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். முன்னதாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தக்கி மற்றும் ரஷ்ய அதிபரின் ஆப்கானிஸ்தானுக்கான சிறப்புக் தூதுவர் காபுலோவ் இடையேயான சந்திப்பின் தொடர்ச்சியாக இந்த உயர்மட்டப் பயணம் நடைபெற்றுள்ளது.

தற்போது இரு தரப்பு அதிகாரிகளுக்கும் இடையே நடைபெறும் ஆலோசனைகளின் முடிவில் முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் தாலிபான் அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக விளங்கும் ரஷ்யா, தற்போது தனது பொருளாதார மற்றும் வணிக உறவுகளை மேலும் விரிவுபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.