Posted in

ஒரே விமான எண், ஒரே வான்வெளி: அமெரிக்காவில் நடுவானில் பெரும் விமான விபத்து தவிப்பு!

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள பினிக்ஸ் ஸ்கை ஹார்பர் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த இரு பயணிகள் விமானங்கள் ஒரே விமான எண்ணுடன் ஒரே வான்வெளியில் பறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏர் டிராஃபிக் கன்ட்ரோலரின் (ATC) சமயோசிதமான செயல்பாட்டால் இரு விமானங்களும் நேருக்கு நேர் மோதும் பெரும் ஆபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டது.

சிகாகோவில் இருந்து பினிக்ஸ் வந்துகொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் (American 2482) மோசமான வானிலை காரணமாக தாமதமானது. இதனால் பினிக்ஸில் இருந்து புறப்பட வேண்டிய அடுத்தக்கட்டப் பயண தாமதத்தைத் தவிர்க்க, நிறுவனம் மற்றொரு விமானத்தைப் அதே ‘American 2482’ என்ற எண்ணில் இயக்கியுள்ளது. இதன் காரணமாக, பினிக்ஸில் இருந்து புறப்பட்ட விமானமும், சிகாகோவில் இருந்து தரையிறங்க வந்த விமானமும் ஒரே நேரத்தில் பினிக்ஸ் வான்வெளியில் ஒரே அழைப்பு எண்ணுடன் (Call Sign) பறக்க நேரிட்டது.

ஒரே நேரத்தில் இரு விமானங்களுக்கும் கட்டுப்பாட்டு அறை அறிவுறுத்தல்களை வழங்கும்போது குழப்பம் ஏற்பட்டு, இரண்டும் ஒரே உயரத்தில் பறக்க நேரிட்டால் மோதல் ஏற்படும் அபாயம் நிலவியது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஏர் டிராஃபிக் கன்ட்ரோலர், இரு விமானங்களையும் “American 2482 Arrival” மற்றும் “American 2482 Departure” என உடனடியாகப் பிரித்து அழைத்து தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கினார். தரையிறங்கும் விமானத்தை அதிக உயரத்திலும், புறப்பட்ட விமானத்தைக் குறைந்த உயரத்திலும் பறக்க வைத்து ஆபத்தைத் தடுத்தார்.

25 ஆண்டுகால அனுபவம் கொண்ட அந்த ஏர் டிராஃபிக் கன்ட்ரோலரின் திறமையான வழிகாட்டுதலால் இரு விமானங்களும் பாதுகாப்பான தூரத்தில் விலகிச் சென்றன. இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (FAA) மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.