Posted in

முதல்முறை எம்.எல்.ஏ.-க்களுக்கு புதிய கார் மற்றும் உதவியாளர்: விசிக கோரிக்கையை ஏற்று முதல்வர் விஜய் அதிரடி!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், முதன்முறையாக எம்.எல்.ஏ.-வாகத் தேர்வாகியுள்ள புதிய உறுப்பினர்களுக்குத் தொகுதிப் பணிகளை மேற்கொள்ள அரசு சார்பில் கார் மற்றும் அலுவலக உதவியாளர் வசதி செய்து தர முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. ஜோதிமணி, பொருளாதார வசதி இல்லாத பல புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி முழுவதும் சென்று மக்களுக்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள போதுமான வாகன வசதியோ அல்லது உதவியாளர்களை வைத்துக் கொள்ளும் அளவுக்கு நிதி வசதியோ இல்லை என பேரவையில் கோரிக்கை முன்வைத்தார்.

இந்தக் கோரிக்கைக்குப் பதிலளித்துப் பேசிய பேரவைத் தலைவர் ஜே.டி.சி. பிரபாகர், முதலமைச்சரின் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, எளிய பின்னணியில் இருந்து சட்டமன்றத்திற்குள் நுழைந்த உறுப்பினர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், மக்கள் சேவையை விரைவுபடுத்தவும் முதலமைச்சர் விஜய் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் மூலம் சட்டப்பேரவைக்கு முதன்முறையாகத் தேர்வான உறுப்பினர்கள் தங்களின் தொகுதி எல்லைகளுக்கு உட்பட்ட கிராமப்புறப் பகுதிகளுக்கு விரைவாகச் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறியவும், அடிப்படைப் பணிகளை ஆய்வு செய்யவும் இந்தப் புதிய வசதி பெரும் உதவியாக இருக்கும். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் அரசாணை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.