சர்வதேச அளவில் நிலவும் எண்ணெய் சந்தை நெருக்கடிகளுக்கு இடையே, கனடாவில் தற்காலிகமாக அமல்படுத்தப்பட்டிருந்த கூட்டாட்சி எரிபொருள் கலால வரி (Federal Fuel Excise Tax) விலக்கு வரும் செப்டம்பர் 7-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கணிசமான உயர்வு இருக்கும் என்ற தகவல் வாகன ஓட்டிகள் மற்றும் வர்த்தகர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர்ப் பதற்றங்கள் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததை அடுத்து, கனடா பிரதமர் மார்க் கர்னி தலைமையிலான அரசு ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் எரிபொருள் மீதான 10 சென்ட் கலால வரியை தற்காலிகமாக ரத்து செய்தது. இந்த 5 மாத கால வரி விலக்கு நடவடிக்கை மூலம் கனடா மக்களுக்கு சுமார் $2.4 பில்லியன் அளவிற்கு நிவாரணம் கிடைத்தது. இருப்பினும், திட்டமிட்டபடி இந்த வரி விலக்கு காலம் முடிவுக்கு வருவதால், மீண்டும் முழு வரி அமலுக்கு வரவுள்ளது.
இந்த வரி விலக்கு நீக்கப்பட்டால், பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் 10 முதல் 11 சென்ட் வரை உயரும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அதே நேரத்தில், செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் குளிர்காலத்திற்கான குறைந்த விலையிலான எரிபொருள் பயன்பாட்டிற்கு மாறுவதால் விலை உயர்வு சற்று குறையக்கூடும் என்றும், ஆனாலும் இடைப்பட்ட ஒரு வார காலத்தில் பெட்ரோல் விலையில் கடுமையான ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் இன்னும் சிக்கல்கள் நிலவி வருவதால், மத்திய அரசு இந்த வரி விலக்கை மேலும் நீட்டிக்குமா அல்லது செப்டம்பர் 7-டன் முடிவுக்கு கொண்டுவருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வரவிருக்கும் நாட்களில் அரசு எடுக்கும் முடிவைப் பொறுத்தே வாகன ஓட்டிகளுக்கான இறுதிச் செலவு தீர்மானிக்கப்படும்.