Posted in

அமுதன் கொலைக்கு நீதி வேண்டும்! – கோவையில் தவெக அரசுக்கு எதிராக திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

கோவையில் தனியார் கல்லூரிப் பொறியியல் மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து திமுக மாணவரணி சார்பில் ஒத்தக்கல்மண்டபம் பகுதியில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தவெக அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகவும், நூற்றுக்கணக்கான கொலைகள் மற்றும் குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருவதாகவும் குற்றம் சாட்டி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கல்லூரி வளாகத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் தவறான நடவடிக்கைகளைத் தட்டிக்கேட்ட காரணத்தினாலேயே மாணவர் அமுதன் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறிய திமுக நிர்வாகிகள், கல்வி நிலையங்களில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது எனச் சாடினர். இக்கொலை வழக்கைக் சாதாரண மாணவர் மோதலாகச் சித்தரிக்கக் கூடாது என்றும், இதில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளையும் உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாணவர் அமுதனின் பெற்றோரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறியதுடன், இந்த விவகாரம் குறித்துச் சட்டமன்றத்தில் திமுக சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதையும் நினைவூட்டினார். “பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை திமுக ஓயாது” என உறுதியளித்த அவர், மாநிலத்தின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறினால் போராட்டம் தீவிரமடையும் என எச்சரித்தார்.

திமுக மாணவரணியின் இந்தத் தீவிரப் போராட்டம் மற்றும் கண்டனக் குரல்கள் காரணமாகத் தமிழக அரசியல் களத்தில் தவெக அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. மாணவர் கொலை வழக்கைக் தீவிரமாகப் புலனாய்வு செய்து வருவதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும், குற்றங்களைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியிலும் வலுத்து வருகிறது.