ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சையைக் கைப்பற்றி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் முதன்முறையாக தங்களது “வெற்றி நாள்” (Victory Day) விழாவை நடத்த தலிபான் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கப் படைகளின் வெளியேற்றத்திற்குப் பிறகு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய தினத்தைக் குறிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
புதுடெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தின் சார்ஜ் டி அஃபேர்ஸ் (Chargé d’Affaires) நூர் அகமது நூர் தலைமையின் கீழ் இந்த வரவேற்பு நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதில் வெளிநாட்டு தூதர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் இந்தியாவில் வசிக்கும் ஆப்கானியப் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021-ல் அஷ்ரஃப் கானி அரசு வீழ்ந்த பிறகு, டெல்லி தூதரகத்தில் தலிபான் அமைப்பால் பகிரங்கமாக நடத்தப்படும் முதல் பெரிய அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி இதுவாகும்.
சர்வதேச அளவில் தலிபான் அரசை இந்தியா உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்ற போதிலும், பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் மக்களின் நலன் கருதி தலிபான் நிர்வாகத்துடன் நடைமுறை ரீதியிலான தூதரக உறவுகளை இந்தியா விரிவுபடுத்தி வருகிறது. காபூலில் உள்ள இந்தியத் தூதரகப் பணிகள் வலுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், டெல்லி தூதரகத்தின் பொறுப்புகளைத் தலிபான் பிரதிநிதிகள் ஏற்றுக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் மனிதநேய உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் சூழலில், டெல்லியில் நடைபெறும் இந்த வெற்றி நாள் விழா இருதரப்பு ராஜதந்திர உறவில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. எனினும், நிகழ்வில் பயன்படுத்தப்படும் கொடி உள்ளிட்ட தேசியச் சின்னங்கள் மற்றும் இந்திய அதிகாரிகளின் பங்கேற்பு குறித்து சர்வதேச அளவில் கவனம் குவிந்துள்ளது.