ஐரோப்பிய வரலாற்றுப் பக்கங்களில் ‘வேம்பயர்’ (Vampire) எனப்படும் ரத்தக் காட்டேரி குறித்த பயமும் மூடநம்பிக்கைகளும் பல நூற்றாண்டுகளாக கிராம மக்களை உலுக்கி வந்துள்ளன. குறிப்பாக, கிராமங்களில் திடீரெனப் பரவும் நோய்கள், அமானுஷ்ய நிகழ்வுகள் மற்றும் விவரிக்க முடியாத மரணங்களுக்குக் காரணம், புதைக்கப்பட்ட பிணங்கள் மீண்டும் உயிர்பெற்று வந்து ரத்தம் குடிப்பதே என்ற அதிர்ச்சி நம்பிக்கை மக்களிடையே வேரூன்றியிருந்தது.
வரலாற்றிலேயே முதன்முதலாகப் பதிவு செய்யப்பட்ட ரத்தக் காட்டேரி சம்பவமாக குரோஷியாவின் க்ரிங்கா (Kringa) கிராமத்தைச் சேர்ந்த ஜூரே கிராண்டோ (Jure Grando) என்பவரின் கதை பார்க்கப்படுகிறது. 17-ஆம் நூற்றாண்டில் உயிரிழந்த இவரின் ஆவி, கிராம மக்களுக்குத் தோன்றி அச்சுறுத்தியதாகவும், பலரைக் கொன்றதாகவும் நம்பப்பட்டது. இதனால் பீதியடைந்த கிராம மக்கள் மற்றும் பாதிரியார்கள் இணைந்து, அவரது சடங்கைத் தோண்டி எடுத்து, தலையைத் துண்டித்துச் சடங்குகளைச் செய்த பின்னரே கிராமத்தில் அமைதி திரும்பியதாகப் பழைய ஆவணங்கள் கூறுகின்றன.
இதேபோன்று, ஐரோப்பாவின் பல பகுதிகளில் இறந்தவர்களின் உடல்கள் ‘காட்டேரியாக’ மாறாமல் இருக்க பல்வேறு கொடூரமான பரிகார சடங்குகள் நடத்தப்பட்டன. உடலின் தலையைத் துண்டித்து வேறொரு இடத்தில் புதைப்பது, உடலின் கழுத்து பகுதியில் அரிவாள் வைப்பது, நெஞ்சில் மரக் கட்டையைத் தைப்பது மற்றும் ரத்தத்தைக் குடித்து நோய் நீக்கும் சடங்குகளைச் செய்வது எனப் பயங்கரமான மூடநம்பிக்கைகள் நடைமுறையில் இருந்தன.
இன்றைய அறிவியல் பார்வையில், இறந்த மனித உடல்கள் சிதையும் போது ஏற்படும் இயற்கையான மாற்றங்கள் மற்றும் பிளேக் போன்ற தொற்றுநோய்கள் பற்றிய அறியாமையே அன்றைய மக்களை இத்தகைய அமானுஷ்ய சடங்குகளுக்குத் தள்ளியது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த அமானுஷ்ய நிகழ்வுகளும் ‘தலை துண்டிப்பு’ சடங்குகளுமே பிற்காலத்தில் நவீன நாவல்கள் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் வேம்பயர் கதைகள் உருவாக முதன்மைப் மூலப்பொருளாக அமைந்தன.