Posted in

பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமிடம் ஆள்மாறாட்டச் சம்பவம்!

பிரிட்டனின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளஆண்டி பர்ன்ஹாம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முதன்மை உதவியாளரான சூசி வைல்ஸ் (Susie Wiles) போல ஆள்மாறாட்டம் செய்த ஒருவருடன் குறுஞ்செய்திகளைப் பகிர்ந்து கொண்ட சம்பவம் சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை மாத இறுதியில் பிரிட்டன் பிரதமராகப் பொறுப்பேற்ற ஆண்டி பர்ன்ஹாமிற்கு, வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியான சூசி வைல்ஸின் பெயரில் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அச்செய்தியை உண்மையானது என நம்பிய பிரதமர் பர்ன்ஹாம், அந்த மர்ம நபருடன் சில குறுஞ்செய்திகளைப் பரிமாறிக் கொண்டுள்ளார். இருப்பினும், உரையாடலின் போக்கில் எழுந்த சந்தேகத்தையடுத்து, அவர் உடனேத் தகவல்தொடர்பை நிறுத்திவிட்டு பாதுகாப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வாஷிங்டனில் உள்ள பிரிட்டன் தூதரகம் உடனடியாக வெள்ளை மாளிகையைத் தொடர்புகொண்டு முறையிட்டது. மேலும், சூசி வைல்ஸின் கைபேசி அல்லது சாதனங்கள் ஏதேனும் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டது. ஆனால், வெள்ளை மாளிகை தரப்பில் தங்களது அதிகாரிகளின் சாதனங்கள் எதுவும் ஊடுருவப்படவில்லை எனவும், இது தனிப்பட்ட ஆள்மாறாட்ட முயற்சி எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல்தொடர்பில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசியங்கள் எதுவும் பரிமாறப்படவில்லை என்றும், வழக்கமான உரையாடல்களே நடைபெற்றதாகவும் பிரிட்டன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “தேசியப் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் நாங்கள் கருத்து தெரிவிக்க மாட்டோம்” என டவுனிங் ஸ்திரீட் வழக்கமான பதிலை அளித்துள்ள போதிலும், உயர்மட்டத் தலைவர்களிடையே நடைபெறும் இத்தகைய ஆள்மாறாட்ட சம்பவங்கள் இணையப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளன.