Posted in

தவெக அரசின் 100 நாள் சாதனையா? ஊழியர்கள் மற்றும் நெசவாளர்கள் வேதனை!

தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமான கோ-ஆப்டெக்ஸ் (Co-optex) நிறுவனம், நெசவாளர்களின் கைத்தறிப் பொருட்களை விற்பனை செய்ய இந்தியா முழுவதும் 146-க்கும் மேற்பட்ட கிளைகளை நடத்தி வரும் நிலையில், அதில் 10 விற்பனை நிலையங்களை மூடுவதற்கு நிர்வாகம் முடிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள சூழலில், போதிய வருவாய் இல்லை என்ற காரணத்தைக் கூறி இந்தக் கடைகள் மூடப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு கைத்தறித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த அமைப்பின் மூலம் ஆந்திராவில் 5 கிளைகளும், தமிழ்நாட்டில் 4 கிளைகளும், கோவாவில் 1 கிளையும் என மொத்தம் 10 விற்பனை நிலையங்கள் இம்மாத இறுதிக்குள் மூடப்பட உள்ளன. கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகத்தின் இந்த அதிரடி முடிவுக்குக் கைத்தறி தொழிலாளர்களும் ஊழியர்கள் சங்கத்தினரும் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

பாரம்பரியமிக்க கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய அரசு, வருவாயை மட்டுமே காரணியாகக் கொண்டு மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்ற கிளைகளை மூடுவது நியாயமற்றது என ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அரசு தனது 100 நாள் சாதனைகளைக் கொண்டாடி வரும் வேளையில், நெசவாளர்களின் முதன்மை விற்பனை மையங்களை மூடுவதுதான் தவெக அரசின் சாதனையா எனப் பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கிளைகளைக் கொண்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் அமைப்பின் விற்பனை மையங்கள் மூடுவதைத் தடுக்க அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என நெசவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள விற்பனை நிலையங்களை நவீனமயமாக்கி, மார்க்கெட்டிங் உத்திகள் மூலம் லாபப் பாதைக்கு மாற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.