தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரும், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளுமான காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் தொடர்பான செய்திகள் மீண்டும் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவத் தொடங்கியுள்ளன. ஏற்கனவே இவர்களது திருமணம் ஸ்பெயின் நாட்டில் நடைபெறவுள்ளதாகப் வதந்திகள் பரவிய நிலையில், தற்போது வரும் நவம்பர் 10-ம் தேதி கிரீஸ் (Greece) நாட்டில் பிரம்மாண்டமான முறையில் ‘டெஸ்டினேஷன் வெட்டிங்’ ஆக நடைபெறவுள்ளதாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில மாதங்களாகவே அனிருத் மற்றும் காவ்யா மாறன் இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் பல்வேறு செய்திகள் உலா வந்தன. இந்த நிலையில், சமீபத்தில் அனிருத்தின் மாமாவும் மூத்த நடிகருமான வை.ஜி. மகேந்திரன் அளித்த பேட்டி ஒன்றில், அனிருத்தின் திருமணம் விரைவில் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக நடக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார். இதுமட்டுமின்றி காவ்யா மாறனின் நிர்வாகத் திறமையைப் பாராட்டி அவர் பேசியது, இந்தத் திருமண வதந்திகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்தது.
தற்போது பரவி வரும் தகவல்களின்படி, தீபாவளி பண்டிகைக்குப் பிறகு நவம்பர் 10 அன்று கிரீஸ் நாட்டின் எழில் கொஞ்சும் கடற்கரை நகரில் மிக நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காகத் தனது கைவசம் உள்ள படங்களின் இசைப் பணிகளை அனிருத் தீவிரமாக முடித்து கொடுத்து வருவதாகவும் திரைத்துறை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இருப்பினும், இந்தத் திருமண தேதி மற்றும் கிரீஸ் நாட்டின் டெஸ்டினேஷன் வெட்டிங் குறித்த செய்திகள் தொடர்பாக அனிருத் தரப்பிலோ அல்லது காவ்யா மாறனின் சன் குழுமத் தரப்பிலோ இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியப்படவில்லை. சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி காட்டுத்தீ போல் பரவி வரும் நிலையில், இரு தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வ விளக்கம் வரும் வரை இது வெறும் திரையுலக வதந்தியாகவே பார்க்கப்படுகிறது.