Posted in

விமான ஊழியர்களுக்கு புற்றுநோய் ஆபத்து! –  புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்!

விமானங்களில் பலாயிரம் அடி உயரத்தில் பணிபுரியும் பைலட்டுகள் மற்றும் விமானப் பணிப்பெண்கள் (Flight Attendants), விண்வெளியில் இருந்து வரும் ஆபத்தான ‘காஸ்மிக் கதிர்வீச்சால்’ (Cosmic Ionizing Radiation) கொடூரமான புற்றுநோய்களுக்கு ஆளாகி உயிரிழக்கும் அபாயம் மிக அதிகமாக இருப்பதாக ஹார்வர்டு மருத்துவக் கல்லூரி நடத்திய புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. 500-க்கும் மேற்பட்ட தொழில்களை ஒப்பீடு செய்து நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் ‘JAMA Internal Medicine’ இதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

ஆய்வாளர்களின் கூற்றுப்படி, சுமார் 1.27 கோடி இறப்புச் சான்றிதழ்களை பகுப்பாய்வு செய்ததில், அமெரிக்காவில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பணிகளில் விமானப் பணிப்பெண்கள் (6.9%) மற்றும் பைலட்டுகள் (6.7%) ஆகிய இரு பிரிவினருக்கே கதிர்வீச்சு தொடர்பான புற்றுநோய்களால் இறக்கும் விகிதம் மிக அதிகமாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அணுமின் நிலையங்களில் அணுக்கதிர் வீச்சுக்கு இடையே பணிபுரியும் ஊழியர்களைக் காட்டிலும், வானில் உயரே பறக்கும் விமான ஊழியர்களே அதிகளவு கதிர்வீச்சைப் பெறுவதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பூமியின் வளிமண்டலத்திற்கு மேலே அதிக உயரத்தில் பறக்கும் போது, சூரியன் மற்றும் விண்வெளியில் இருந்து வரும் கதிர்வீச்சிலிருந்து வளிமண்டலம் அளிக்கும் பாதுகாப்பு குறைகிறது. இதன் காரணமாக, நீண்ட தூர விமானப் பயணங்களின் போது காஸ்மிக் கதிர்வீச்சு உடலுக்குள் ஊடுருவி செல்களைப் பாதிப்பதாக மருத்துவ நிபுணர்கள் விளக்குகின்றனர். இதன் விளைவாக மார்பகப் புற்றுநோய், மூளை மற்றும் நரம்பு மண்டலப் புற்றுநோய், தோலில் ஏற்படும் மெலனோமா மற்றும் லுகேமியா (ரத்தப் புற்றுநோய்) போன்ற கொடிய நோய்கள் இவர்களுக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது.

வழக்கமான பயணிகளுக்கு இந்த பாதிப்பு மிகக் குறைவு என்ற போதிலும், ஆண்டுக் கணக்கில் தொடர்ந்து வானிலேயே பயணிக்கும் விமான ஊழியர்கள் ஆண்டுக்கு 3 முதல் 6 மில்லிசீவர்ட்ஸ் (mSv) அளவிலான கதிர்வீச்சை எதிர்கொள்கின்றனர். அமெரிக்க விமான போக்குவரத்துத் துறை (FAA) கதிர்வீச்சை உணர்ந்திருந்தாலும், மற்ற சர்வதேச நாடுகளைப் போல ஊழியர்களுக்கான கதிர்வீச்சு வரம்பு மற்றும் முறையான உடல் பரிசோதனைக் கண்காணிப்பை இன்னும் கட்டாயமாக்கவில்லை என்பதால், அவர்களுக்கான பாதுகாப்பை உடனடியாக பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.