தஞ்சாவூரில் மாநகராட்சி அலுவலகம் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்ட விவகாரத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த ஆகாஷ் என்ற இளைஞர், அவசரமாகச் செல்ல வேண்டும் எனக் கூறி வழிகேட்டபோது, அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) அப்துல் ரஹீம் என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், காவல் துறை அதிகாரி அந்த இளைஞரைத் தாக்கியதாகவும், அதற்குப் பதிலடியாக அந்த இளைஞரும் காவல் அதிகாரியைத் தாக்கியதாகவும் வீடியோ காட்சிகள் வெளியாகிச் சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவின. நடுரோட்டில் நடந்த இந்த அசம்பாவிதம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் குறித்துக் காவல் துறைத் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், போராட்டம் நடந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பதற்றமான சூழல் நிலவியதாகவும், அந்த இளைஞர் அதிகாரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால் குறைந்தபட்ச பலத்தைப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சீருடையில் இருந்த அதிகாரியை எதிர்த்துத் தாக்கியதற்காக அந்த இளைஞர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பாகத் தஞ்சாவூர் காவல் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. சமூக வலைதளங்களில் பரவி வரும் அரைக்குறையான வீடியோ பதிவுகளை வைத்து தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும், சம்பவத்தின் முழு பின்னணி குறித்தும் துறைரீதியான விசாரணை தொடர்வதாகவும் அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.