தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைவருடன் பயணித்து வரும் பெண் நிர்வாகி ஒருவர், கட்சியின் மேடையில் ஆற்றிய நெகிழ்ச்சியான பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தவெக சார்பில் தமக்கு அளிக்கப்பட்ட கௌரவத்தையும், கட்சியின் “ரெட் அண்ட் எல்லோ” (சிவப்பு மற்றும் மஞ்சள்) வண்ண ஆடையைத் தாம் தொடர்ந்து அணிந்து வருவதற்கான காரணத்தையும் அவர் மனம்திறந்து விவரித்துள்ளார்.
தமது உரையில் பேசிய அவர், “கடந்த 27 ஆண்டுகளாகத் தளபதி விஜய்யின் நற்பணி மன்றம் மற்றும் மக்கள் இயக்க வழியில் பயணித்து வருகிறேன். தமிழ்நாட்டில் முதன்முதலாகப் பெண் ரசிகர் மன்றப் பட்டத்தைப் பெற்றது நான்தான். எந்தவொரு அரசியல் அமைப்பும் இஸ்லாமியப் பெண்களுக்கு முன்னணி முக்கியத்துவம் அளிக்காத சூழலில், தவெக கொள்கை இணைச் செயலாளராக என்னை அறிவித்து, தமக்கு அருகிலேயே அமரவைத்து எங்களது தலைவர் கௌரவித்தார்” எனக் குறிப்பிட்டார்.
தவெக மாநாட்டின் போது ‘ஏன் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ஆடையை அணிந்திருக்கிறீர்கள்?’ என ஊடகங்களும் மாற்றுக் கட்சியினரும் கேள்வி எழுப்பியதாகக் குறிப்பிட்ட அவர், “எங்கள் தலைவர் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற கொள்கையை ஏற்று இஸ்லாமிய சமூகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். எந்த அரசியல் தளத்தில் நான் வளர்ந்தேனோ, அந்தத் தலைவருக்காகவும் கட்சி அடையாளத்திற்காகவும் என் உயிருள்ளவரை இந்த ஆடையையே அணிந்திருப்பேன்” என உறுதிபடத் தெரிவித்தார்.
தவெக பொதுச்செயலாளரின் வழிகாட்டுதலையும் விஜய்யின் தலைமையையும் பாராட்டிப் பேசிய அவரது உரையை மேடையில் கேட்டுக்கொண்டிருந்த தவெக தலைவர் விஜய், நெகிழ்ச்சியுடனும் புன்னகையுடனும் அதனைக் ரசித்தார். “என் உயிருள்ளவரை தலைமைக்கும் தளபதிக்கும் விசுவாசமாக இருப்பேன்” என அவர் தனது உரையை நிறைவு செய்தபோது அரங்கம் முழுவதும் தொண்டர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்தது.