தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு அதிகார போதையில் விமர்சனங்களை அடக்க முற்படுவதாகவும், முந்தைய திமுக ஆட்சியின் வீழ்ச்சிக்குக் காரணமான அதே பாதையிலேயே தற்போதைய அரசும் பயணிக்கிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளதாகவும் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் மாற்றுக் கருத்துத் தெரிவிப்பவர்கள் மீது தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு வரும் போக்கைக் கண்டித்து முதலமைச்சருக்கு அவர் விடுத்துள்ள அறிக்கை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் தவெக கட்சியினருடனான கருத்து வேறுபாடுகள் மற்றும் விமர்சனங்களுக்காக மாற்றுக் கருத்து கொண்ட 25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அண்ணாமலை, அதிகார பலத்தைப் பயன்படுத்தி ஜனநாயகக் குரல்களை நசுக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, தனது குடும்பத்தைத் தகாத வார்த்தைகளால் விமர்சித்த தவெக தொண்டருக்குப் பதிலளித்த ‘வீ தி லீடர்ஸ்’ தன்னார்வலர் ஒருவரைக் காவல் துறை கைது செய்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூக வலைதளங்களில் தனிநபர் அவதூறுகளைக் கண்காணிப்பது அவசியம்தான் என்ற போதிலும், ஆளுங்கட்சியையும் ஆட்சியாளர்களையும் விமர்சிக்கும் ஒவ்வொரு குரலையும் வழக்கு மற்றும் கைது நடவடிக்கை மூலம் அடக்க நினைப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அழகல்ல என்று அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார். முதலமைச்சரை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயல்படுவதை அரசு அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதலமைச்சர் என்பவர் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் தலைவர் அல்லாமல், மாநிலத்தின் அனைத்து மக்களுக்குமான பொதுவானவர் என்பதால் எதிர்க்கருத்துகளுக்கும் விமர்சனங்களுக்கும் உரிய இடம் அளிக்க வேண்டும் என அண்ணாமலை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். சிறிய விமர்சனங்களுக்குக்கூட கைது நடவடிக்கை என்ற நிலையைத் உடனடியாகத் தடுத்து நிறுத்தி, கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கை தற்போதைய அரசியல் சூழலில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.