மத்திய கிழக்கில் ஈரான் உடனான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வழங்கிய தொலைபேசி பேட்டியில் ஓமான் நாட்டிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணைப் பாதையை கட்டுப்படுத்துவது அல்லது அமெரிக்காவின் கடல்சார் முற்றுகைக்கு முட்டுக்கட்டையாக இருப்பது போன்ற செயல்களில் ஓமான் ஈடுபட்டால், அந்நாட்டின் மீது மிகக் கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரான் மற்றும் ஓமான் ஆகிய இரு நாடுகளும் ஹோர்முஸ் நீரிணை வழியே வர்த்தகக் கப்பல்களைப் பாதுகாப்பாக இயக்குவதற்கான ஒரு கூட்டுப் பாதை வரைபடத்தை உருவாக்குவது குறித்துப் பேசி வருகின்றன. அமெரிக்கா தனது சொந்த பேச்சுவார்த்தைகளையும், ஈரானுக்கு எதிரான பொருளாதார முற்றுகையையும் தீவிரப்படுத்தி வரும் சூழ்நிலையில், ஓமானின் இந்த தலையீடு அமெரிக்காவின் வியூகங்களுக்கு தடையை ஏற்படுத்துவதாக டிரம்ப் கருதுகிறார். இதனால் ஓமான் குறுக்கே நின்றால் கடுமையான இராணுவ நடவடிக்கையைச் சந்திக்க நேரிடும் என அவர் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பல ஆண்டுகளாக ஒரு மத்தியஸ்தராகவும், அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முக்கிய தூதராகவும் ஓமான் செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போதைய சூழலில் டிரம்ப் விடுத்துள்ள இந்த நேரடி மிரட்டல், வலைகுடா பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதே வேளையில், ஈரான் உடனடியாக நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்றும், இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவிற்கு எந்தவித அவசரமும் அல்லது காலக்கெடுவும் இல்லை என்றும் டிரம்ப் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையில் தொடர்ந்து நிலவி வரும் இந்த முட்டுக்கட்டை மற்றும் மோதல் போக்கால் உலகளாவிய எரிபொருள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் செல்லும் இந்தப் பாதையில் அமைதி திரும்பாவிட்டால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.