விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்க நிறுவனங்களுக்கு இணையாகத் தனது தொழில்நுட்ப பலத்தை நிரூபிக்கும் வகையில், சீனாவின் ‘லேண்ட்ஸ்பேஸ்’ (LandSpace) என்ற தனியார் விண்வெளி நிறுவனம் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் பூஸ்டரை வெற்றிகரமாகத் தரையிறக்கி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. அந்நிறுவனத்தின் ‘ஜூக்வே-3’ (Zhuque-3) ராக்கெட்டின் முதல் கட்ட பூஸ்டர், விண்ணில் ஏவப்பட்ட பிறகு பாதுகாப்பாகத் திட்டமிடப்பட்ட தரையிறங்கு தளத்தை வந்தடைந்தது.
இதன் மூலம், உலகளவில் சுற்றுப்பாதை நிலைக்குச் செல்லும் ராக்கெட் பூஸ்டர்களை மீண்டும் இயக்கும் தொழில்நுட்பத்தில் வெற்றி கண்ட எலான் மாஸ்க்-கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ மற்றும் ஜெஃப் பெசோஸ்-இன் ‘ப்ளூ ஆரிஜின்’ ஆகிய நிறுவனங்களின் பட்டியலில் மூன்றாவது நிறுவனமாகச் சீனாவின் ‘லேண்ட்ஸ்பேஸ்’ இணைந்துள்ளது. இந்தச் சாதனை அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வணிகரீதியான விண்வெளிப் போட்டியில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
மறுபயன்பாட்டு ராக்கெட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விண்வெளிக்குச் செயற்கைக்கோள்கள் மற்றும் பிற உபகரணங்களை அனுப்பும் செலவு பெருமளவில் குறையும். சடாரென அதிகரித்து வரும் வணிகப் பயன்பாட்டுச் செயற்கைக்கோள்களின் தேவையை பூர்த்தி செய்ய இந்த மலிவான மற்றும் விரைவான ராக்கெட் ஏவுதல் முறை மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகிறது.
சீன அரசு ஆதரவு பெற்ற பல தனியார் விண்வெளி நிறுவனங்கள் இத்தகைய சோதனைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், ‘லேண்ட்ஸ்பேஸ்’ நிறுவனத்தின் இந்த வெற்றி அந்நாட்டின் விண்வெளித் துறைக்குப் பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது. மேலும், வரவிருக்கும் ஆண்டுகளில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘ஃபால்கன் 9’ ராக்கெட்டுகளுக்குப் போட்டியாக சர்வதேச விண்வெளிச் சந்தையில் சீனா களம் காண உள்ளதை இது உறுதி செய்துள்ளது.